எங்கும் கொலை, எப்போதும் கொலைதான் நடக்கிறது; நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும் – திமுக அரசு மீது இபிஎஸ் சாடல்!!

சென்னை:
“உங்கள் ஆட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொலைகள் நடக்கவில்லை. எங்கும் கொலை, எப்போதும் கொலைதான் நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்” என்று முதல்வர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக் கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன்.

இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள “கொலை நிலவரத்தை” சுட்டிக்காட்ட விழைகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை, இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது.

முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை? இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய பொம்மை முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா? தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.

குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல் துறை தடுக்காமல் இருந்ததை எப்படி ஸ்டாலின் நியாயப்படுத்த முடியும்?

ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் “அங்கொன்றும் இங்கொன்றுமாக” கொலைகள் நடக்கவில்லை. “எங்கும் கொலை, எப்போதும் கொலை” தான் நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்.

மேற்கூறிய வழக்குகளில் குற்றம் இழைத்தோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *