ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நோயை குணப்படுத்த அதைவிடக் கொடுமையான மருந்தை தருவதற்கு சமம் – முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை:
“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நோயை குணப்படுத்த அதைவிடக் கொடுமையான மருந்தை தருவதற்கு சமம்; நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றும் தேர்தலை நடத்துவதில் இருக்கும் நிர்வாக சிக்கல்களுக்காக ஜனநாயகத்தை முடக்க நினைப்பது தவறு” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-ஆம் ஆண்டு, இந்தோனேஷியா ஜனாதிபதி, தேசிய மற்றும் பிராந்திய சட்டமன்றங்கள், மேலும் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தலை நடத்தியது ஒரு வரலாற்றுச் சம்பவமாக அமைந்தது.

செலவுகளைக் குறைத்து நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மனித உயிர்களின் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. சுமார் 900 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5,000-க்கும் மேற்பட்டோர் கடுமையாக உடல்நலக் குறைவு அடைந்தனர்.

2025 ஜூன் மாதத்தில், இந்தோனேஷிய அரசியலமைப்பு நீதிமன்றம் 2029 முதல் தேசிய மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் தனித்தனியாக – இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகள் இடைவெளியில் – நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. வாக்காளர்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் மீது ஏற்பட்ட அதிகப்படியான சுமையும், ஜனநாயகப் பங்கேற்பில் ஏற்பட்ட பாதிப்பும் இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ (ONOE) முன்மொழிவை ஆதரிப்பவர்கள், லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும், பாதுகாப்புப் படையினரின் நீண்டகால பணியமர்த்தலைத் தவிர்க்கலாம், தேர்தல் நன்னடத்தை விதிகள் (Model Code of Conduct) நடைமுறை காரணமாக ஏற்படும் நிர்வாகத் தடைகளைக் குறைக்கலாம்.

மேலும், அரசியல் கட்சிகள் நிரந்தரப் பிரச்சார நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம் என வாதிடுகின்றனர்.எனினும், இந்தோனேஷியாவின் அனுபவம் ஒரு எச்சரிக்கை பாடமாகத் திகழ்கிறது.

ஒப்பீட்டு அரசியலமைப்பு நடைமுறைகளில், கட்டாயத் தேர்தல் ஒருங்கிணைப்பிற்குப் பெரிதாக ஆதரவு இல்லை. கனடாவில், கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுகின்றன.

ஆஸ்திரேலியாவில் ஒருங்கிணைப்பு இயலாத ஒன்றாகும்: மாநில சட்டமன்றங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் நான்கு ஆண்டுகளாகும்; அதே நேரத்தில் கூட்டாட்சிப் பிரதிநிதிகள் சபையின் அதிகபட்ச பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. ஜெர்மனி பெரும்பாலும் தவறாக மேற்கோள் காட்டப்படுகிறது. அங்கு நிலவும் அரசியல் நிலைத்தன்மை, ஒருங்கிணைந்த தேர்தல்களால் அல்ல.

லேண்டர் (Lander) மாநிலத் தேர்தல்கள் திட்டமிட்டே வெவ்வேறு காலங்களில் நடைபெறுகின்றன. மாறாக ‘Constructive Vote of No Confidence’ (ஆக்கபூர்வமான நம்பிக்கையில்லாத் தீர்மானம்) என்ற முறையால் உருவாகிறது. அதன்படி, சான்சலரை பதவியிலிருந்து நீக்குவதற்கு முன், புந்தெஸ்டாக் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவும் இந்தோனேஷியாவும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பயன்படுத்துகின்றன; இது அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கி, சிறுபான்மையினரின் குரலைப் பாதுகாக்கிறது.

இந்தியாவின் ‘அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றி பெறும் முறைமைக்கு (first-past-the-post) இத்தகைய பாதுகாப்புகள் இல்லை; தேசிய அளவிலான ஒரு அரசியல் அலை மாநிலத் தேர்தல்களையும் முழுமையாகத் தாக்கக்கூடும்.

அமெரிக்கா வழங்கும் ஒப்புமையும் பலவீனமானதே. அங்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் சுழற்சிகள் செயல்படுவதற்குக் காரணம், ஜனாதிபதி முறைமையில் நிர்வாகத்தின் பதவிக்காலம் சட்டமன்ற நம்பிக்கையிலிருந்து தனித்துவமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதுதான்.

அரசியலமைப்பு திருத்த முன்மொழிவு: இந்த யோசனைக்கான மிக விரிவான வரைமுறை, முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் (2023–24) செயல்பட்ட உயர்மட்டக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. இது தற்போது அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 என்ற சட்ட வடிவில் முன்னேறி வருகிறது.

முன்மொழியப்பட்டுள்ள Article 82A படி, லோக்சபா தேர்தல் சுழற்சியுடன் அனைத்து மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலங்களையும் ஒத்திசைக்க ஜனாதிபதிக்கு ஒரு “நியமிக்கப்பட்ட தேதி” அறிவிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அந்தத் தேதிக்குப் பின்னர் உருவாகும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம், அவற்றின் ஐந்தாண்டு காலம் முடிவடையாதிருந்தாலும் குறைக்கப்படும்.

மேலும், இந்த மசோதா “எஞ்சிய பதவிக்காலத்திற்கான தேர்தல்” (unexpired-term elections) என்ற புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்துகிறது: ஒரு சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் முழு ஐந்து ஆண்டு காலம் அல்லாமல், முந்தைய காலத்தின் மீதமுள்ள பகுதியை மட்டும் நிறைவேற்றும். கூடுதலாக, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக

இருந்தால், மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. சட்டப்பிரிவு 83,172 மற்றும் 327 (Articles 83, 172 மற்றும் 327) ஆகியவற்றிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவை தீவிரமான அரசியலமைப்புச் சிக்கல்களை எழுப்புகின்றன.

இந்தியா திட்டமிட்டே ஒரு நாடாளுமன்ற முறைமையைத் தேர்ந்தெடுத்தது. இதில் அரசாங்கம் சட்டமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைத்திருக்கும் வரை மட்டுமே பதவியில் நீடிக்கும். அரசியலமைப்பு சபையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜனநாயகம் ஒரே நேரத்தில் நிலைத்தன்மையையும் பொறுப்பையும் அதிகபட்சமாக உறுதிசெய்ய முடியாது என்று விளக்கினார். இந்தியா நிலைத்தன்மையை விட பொறுப்புணர்வைத் தேர்ந்தெடுத்தது. நிர்வாகத்தின் தொடர்ச்சியான பொறுப்புணர்வு, உறுதியான பதவிக்காலத்தை விட மேலாகக் கருதப்பட்டது.

சட்டப்பிரிவு 75 மற்றும் 164 (Articles 75 மற்றும் 164) நிர்வாகம் சட்டமன்றத்திற்குக் கூட்டுப் பொறுப்புடன் இருப்பதை நிறுவுகின்றன. சட்டப்பிரிவு 83 மற்றும் 172 (Articles 83 மற்றும் 172) சட்டமன்றங்களின் அதிகபட்ச பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என மட்டுமே குறிப்பிடுகின்றன. உறுதியான பதவிக்காலத்தை அல்ல. எனவே, முன்கூட்டிய கலைப்பு ஒரு குறைபாடு அல்ல; அது ஜனநாயகப் பாதுகாப்பாகும். நம்பிக்கை சிதைந்தபோது மக்களுக்குப் புதிய ஆணையை வழங்கும் வாய்ப்பை இது ஏற்படுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்த அடிப்படை தர்க்கத்தையே மாற்றுகிறது; சட்டமன்றக் கலைப்பை நிர்வாகத் தொந்தரவு எனக் கருதி, இந்தியாவை மெதுவாக ஒரு அரை-ஜனாதிபதி முறைமைக்குத் தள்ளுகிறது.

எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்திய ஒன்றியம் (S.R. Bommai vs Union of India (1994)) வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் கூட்டாட்சித் தத்துவம் அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பின் ஒரு பகுதியாகும் என்று உறுதி செய்தது. மாநிலங்கள் வெறும் நிர்வாக அலகுகள் அல்ல; அவை தனித்துவமான அரசியலமைப்பு அடையாளத்தைக் கொண்டவை. அவற்றின் ஜனநாயக அரசியல் சுழற்சிகள் இயல்பாகவே மாறுபடலாம்.

ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்தக் கொள்கையைச் சிதைக்கிறது. சட்டமன்ற நம்பிக்கை சிதைந்ததால் அல்லாமல், தேசிய தேர்தல் கால அட்டவணையுடன் ஒத்திசைக்க மாநில ஆணைகள் குறைக்கப்பட அனுமதிக்கிறது. 2029இல் இது அமல்படுத்தப்பட்டால், 2033இல் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுத்த ஒரு மாநிலத்தின் ஆணை வெறும் ஓர் ஆண்டில் முடிவடையக்கூடும்.

இதற்கு மாறாக, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வெவ்வேறு காலங்களில் நடைபெறுவது அரசுகளுக்குப் பொதுமக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அறியும் வாய்ப்பை வழங்குகிறது.

‘Recall’ என்ற உரிமை இல்லாத முறைமையில், இது பொறுப்புணர்வுக்கான அடுத்த சிறந்த கருவியாகும். Federalist No. 52 இல் ஜேம்ஸ் மேடிசன் எழுதியதுபோல், அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் அரசாங்கம், “மக்களுடன் உடனடி சார்பும் அனுதாபமும்” கொண்டிருக்கச் செய்கின்றன.

“மீதமுள்ள கால” தேர்தல்களின் பிரச்சினை: இந்த முன்மொழிவின் மிகக் கவலைக்கிடமான அம்சம், சட்டமன்றத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டும் தேர்தலை நடத்துவது என்பதாகும். அரசியலமைப்பு “மீதமுள்ள ஆணை” என்ற கருத்தை அங்கீகரிப்பதில்லை.

முன்மொழியப்பட்டுள்ள Articles 83(6) மற்றும் 172(5) புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அவை முந்தைய அவையின் தொடர்ச்சி அல்ல என்று கூறினாலும், தேர்தல் சுழற்சியை ஒருங்கிணைக்க முந்தைய கால அட்டவணையைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.

முதலில், இது வாக்குரிமையின் மதிப்பைக் குறைக்கிறது. நடுக்காலத் தேர்தல்கள் குறுகிய கால ஆணையைக் கொண்ட அரசுகளை உருவாக்கும்; தேர்தல்கள் இடைக்காலப் பயிற்சிகளாக மாறி, வாக்காளர்களின் அலட்சியத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இரண்டாவது, இது நிர்வாகத்தையும் பொறுப்பையும் பாதிக்கிறது. குறுகிய கால ஆணையைக் கொண்ட அரசுகளுக்கு கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் ஊக்கம் குறையும்; இதனால் மக்கள் கவரும் அரசியல் மற்றும் கொள்கை திசைதிருப்பங்கள் அதிகரிக்கக்கூடும். MCC விதிகள் ஏற்படுத்தும் தற்காலிகக் கட்டுப்பாடுகளை விட, குறைக்கப்பட்ட ஆணைகள் பல ஆண்டுகள் நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடும்.

மூன்றாவது, “நிர்வாக வெற்றிடம்” உருவாகும் அபாயம் உள்ளது. “மீதமுள்ள காலம்” எவ்வளவு இருந்தால் நடுக்காலத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச அளவையே இந்த மசோதா குறிப்பிடவில்லை.

மாநில மட்டத்தில், தேர்தலை ஒத்திவைப்பது ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கக்கூடும்; இது Article 356(5) உடன் முரண்படுகிறது. அந்தப் பிரிவு ஜனாதிபதி ஆட்சியை ஒரு ஆண்டுக்கு மட்டுமே அனுமதிக்கிறது; தேசிய அவசரநிலை மற்றும் தேர்தல் ஆணையச் சான்று இருந்தால் மட்டுமே மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.

மத்திய மட்டத்தில், ஒருங்கிணைந்த தேர்தலைக் காத்திருக்கும் இடைக்கால அரசு பதவியில் நீடிக்கக்கூடும்; இது நாடாளுமன்றம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூட வேண்டும் என்ற Article 85 விதியுடன் முரண்படலாம். அத்தகைய அரசு Articles 112–117 படி முழுமையான பட்ஜெட்டை சமர்ப்பிக்க முடியாது; Article 116ன் கீழ் Vote on Account மட்டுமே வழங்க முடியும். இதனால் நிதி நிர்வாகம் பாதிக்கப்படும். இதனால் “மீதமுள்ள கால” நடைமுறை, ஆறு மாதத்தைத் தாண்டி ஒன்றிய மட்டத்தில் சட்டரீதியாகச் செயல்பட இயலாததாகும்; மேலும் இது அரசியலமைப்பின் அடையாளத்தையே மாற்றக்கூடிய பரந்த திருத்தங்களைத் தேவைப்படுத்தும் அபாயம் உள்ளது.

முன்மொழியப்பட்ட Article 82A(5), லோக்சபா தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடத்த இயலாதபோது மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்குத் தெளிவான அளவுகோல்கள், காலவரம்புகள் அல்லது நாடாளுமன்ற மேற்பார்வை இல்லாமல் பரிந்துரைக்க அனுமதிக்கிறது. சட்டப்பிரிவு (Article 356)யில் கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன — நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் கால வரம்புகள். ஆனால் Article 82A(5) வழிகாட்டுதலற்ற அதிகாரப் பகுதியை உருவாக்குகிறது.

ஒரு மாநில அரசு நடுக்காலத்தில் வீழ்ந்தால், ஒன்றிய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி தேர்தலை ஒத்திவைத்து, ஆளுநர் மூலமாக மாநிலத்தை நிர்வகிக்கலாம். பின்னர் நடைபெறும் தேர்தலுக்குப் பின் உருவாகும் அரசு குறுகிய கால பதவிக்காலத்தை மட்டுமே பெறக்கூடும்.

இத்தகைய தவறான பயன்பாடு நிகழுமா என்பது கேள்வி அல்ல; இந்த திருத்தம் அதற்கான அரசியலமைப்பு வாய்ப்பை உருவாக்குகிறது என்பதே முக்கியம். Federalist No. 59 (1788) இல் அலெக்சாண்டர் ஹாமில்டன் எச்சரித்தபடி, தவறாகப் பயன்படுத்தும் சாத்தியமே “மறுக்க முடியாத எதிர்ப்பாகும்”.

NJAC வழக்கில் (2015), உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் செல்லுபடியாக்கம் அதிகாரம் 356 இல் கூட வாறு பயன்படுத்தப்படும் என்பதிலல்ல; அதன் நிறுவனக் கட்டமைப்பில்தான் அமைகிறது என்று தீர்மானித்தது.

அடிப்படை அம்சத்தைக் கட்டமைப்பு ரீதியாக ஆபத்துக்குள்ளாக்கும் திருத்தம், அதிகாரம் நன்மையாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட அரசியலமைப்புக்கு முரண்பட்டதாகும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டாட்சியை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது; தேர்தல் ஒருங்கிணைப்பின் பெயரில் தேர்ந்தெடுக்கப்படாத மாநில நிர்வாகத்தை நீட்டிக்க இது வழிவகுக்கக்கூடும்.

செலவு குறித்து இந்த மாற்றம் நியாயமல்ல: தேர்தல்களின் நிதிச் சுமை மொத்த பொருளாதார அளவில் மிகச் சிறியது; இதனைக் காரணமாகக் கொண்டு இவ்வளவு பெரிய அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வது நியாயமல்ல.

நாடாளுமன்ற நிலைக் குழுவின் மதிப்பீட்டுப்படி, லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் மொத்தச் செலவு சுமார் ரூ.4,500 கோடி (2015–16) ஆகும் — இது ஒன்றிய பட்ஜெட்டின் சுமார் 0.25% மற்றும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 0.03% மட்டுமே. PRS தரவுகளின்படி, லோக்சபா தேர்தல்களின் செலவு 0.02% முதல் 0.05% வரை (1957–2014) இருந்துள்ளது.

தேர்தல்கள் கட்டங்களாக நடைபெறுகின்றன (2024இல் 82 நாள்கள்), இதனால் தேர்தல் ஆணையம் EVMகள், VVPATகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை மாறிமாறிப் பயன்படுத்த முடிகிறது. ஒரே நேரத் தேர்தல்கள் இந்த நெகிழ்வுத்தன்மையை நீக்கி, அதிக செலவான புதிய வளங்களைத் தேவைப்படுத்தும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1%க்கும் குறைவான செலவைச் சேமிக்க அரசியலமைப்பைத் திருத்தி கூட்டாட்சியை பலவீனப்படுத்துவது புத்திசாலித் தனமானதா? தேர்தல்கள் குறைக்க வேண்டிய நிர்வாகச் செலவாக அல்ல; அது தன்னாட்சியின் மீண்டும்மீண்டும் செலுத்தப்படும் விலையாகும் — அதிகாரம் மக்களிடம் பொறுப்புடன் இருக்கச் செய்வதற்கான கட்டாயமான ஜனநாயகச் செலவாகும்.

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒன்றியம்-மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் ஜோசப் குழு, தனது அறிக்கையின் முதல் பகுதியில் (பிப்ரவரி 2026) இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசும் ஏற்றுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்’ முன்மொழிவால் வாக்குறுதி அளிக்கப்படும் நன்மைகள் மிகைப்படுத்தப்பட்டவை; ஆனால், அதன் கட்டமைப்பு பாதிப்புகள் ஆழமானவை. இது அரசியலமைப்பின் அடையாளத்தையே மாற்றி, அடிப்படை அமைப்புக் கொள்கையை மீறுகிறது.

இந்தோனேஷியாவின் தவறை இந்தியா மீண்டும் செய்யக்கூடாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *