நன்றி மறந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்; உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்தார் – ஓபிஎஸ் விமர்சனம்!!

தென்காசி:
“நன்றி மறந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்தார். தனது சுயநலனை மட்டுமே நினைப்பவர் ஓர் இயக்கத்தின் தலைவராக இருக்க முடியாது.

அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சியாக மாற்றிவிட்டார்” என எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், இலஞ்சியில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் வேண்டுமானாலும் கட்சியை அபகரித்தக்கொண்டு நாடகமாடலாம்.

ஆனால், நிலையாக நின்று, எந்த நோக்கத்துக்காக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்காக நிலையாக நின்று, சரித்திர சாதனையை நிகழ்த்தியவர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பார்த்துப் பார்த்து நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தத் திட்டங்களின் முழு பயன்களையும் மக்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்கிறார்.

முன்பு இருந்த அரசுகள் திட்டங்களை அறிவித்துவிடுவார்கள். ஆனால் அந்த திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று ஆய்வு செய்வதில்லை.

ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆட்சியின் பலன்கள் நேரடியாக மக்களுக்கு கிடைக்கச் செய்கிறார்.

தாய்மார்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை அவர்களுக்கு தெரியாமலேயே வங்கி கணக்கில் செலுத்தினார்.

செய்தி வந்த பின்னர்தான் 5 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வந்ததை மக்கள் அறிந்துகொண்டார்கள். அந்த அளவுக்கு சாதனைகளை செய்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

எதிர்க்கட்சியில் இருப்பவர் தவறான பிரச்சாரங்களை செய்து வருகிறார். கத்திக் கத்தி பேசினால் மக்கள் கேட்பார்கள் என்று அவர் நினைக்கிறார். அவர் பெயரைச் சொல்லக்கூட நான் விரும்பவில்லை.

ஊர்ந்து போய் பதவியை பெற்று, பதவி கொடுத்தவருக்கே நன்றியில்லாமல் இருந்தவர் அவர். தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே, தன்னை மீண்டும் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தனது கைக்கூலிகளை வைத்து சொல்லச் சொன்னார். ஆனால், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா பெயர்தான் இருக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதை தூக்கி போட்டுவிட்டார்.

பொதுச் செயலாளராக தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டார். ஆனால் என்ன ஆனது? இவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் வந்த 10 தேர்தல்களிலும் தோல்வியடைந்தார். அவரை நம்பவில்லை.

இப்போது அவர் அறிவிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. அவர் சொல்வதெல்லாம் பொய் என்பதை அறிந்து கொண்டார்கள்.

பதவி கொடுத்தவருக்கே நன்றியாக இருக்காமல் மிகப் பெரிய துரோகத்தை செய்தவர்.

நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரை பழித்தும் பேசினார். நன்றி மறந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்தார்.

தனது சுயநலனை மட்டுமே நினைப்பவர் ஓர் இயக்கத்தின் தலைவராக இருக்க முடியாது. அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சியாக மாற்றிவிட்டார்” என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகால அவரது ஆட்சியின் சரித்திர சாதனை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர்.

அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நோக்கம் நிறைவேற சிறு துரும்பாக நான் இருப்பேன்.

திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆட்சியிலும், கட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மக்கள் ஏற்கவில்லை. அதனால்தான் தொடர் தோல்வியை மக்கள் அளித்தார்கள்.

பிரச்சினைகளை தடுத்து நிறுத்தும் சக்தியாகவும், பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கு உரிய தண்டனையையும் பெற்றுத் தரும் சக்தியாகவும் தமிழக அரசு உள்ளது.

பிரச்சினைகளில் உடனடி நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கிறது. தமிழகத்தில் இருந்தும் மக்களின் வரிப்பணம் மத்திய அரசுக்கு செல்கிறது.

அந்த நிதியை மாநிலங்களுக்கு திரும்ப வழங்கும்போது சமநிலையோடு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 18 வயதிலேயே நான் திமுகவில் இருந்திருக்கிறேன். இப்போது திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்துள்ளேன்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் முறையாகவும் வெற்றி பெறும் சரித்திர சாதனையை உருவாக்குவார்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *