ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் – தினகரன் !!

தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் கலைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் கலைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது – ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அச்சங்கம் தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சுனாமி எனும் ஆழிப்பேரலையில் சிக்கி தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 13 மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு கலைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுய உதவிக்குழுக்களை அமைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தொழிற்கடன் வழங்குதல் என பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து வந்த தமிழ்நாடு நிலைத்த வாழ்வாதார சங்கம் திடீரென கலைக்கப்பட்டிருப்பதால், அதில் பணியாற்றி வந்த 50க்கும் அதிகமான பணியாளர்களுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

சுனாமி பேரலை தாக்கி ஆண்டுகள் பல கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மீள முடியாத சூழலில், தங்களின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த சங்கம், அரசின் கொள்கை முடிவு எனக்கூறி கலைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, 13 கடலோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை தொடர அனுமதித்து, அத்திட்டத்தில் பணிபுரிந்த 50க்கும் அதிகமான ஒருங்கிணைப்பாளர்களோடு சேர்த்து ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *