எது எப்படி இருந்தாலும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து!!

குவாஹாட்டி:
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 128 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் அதை எட்டி அசத்தியது. அந்த அணியின் இளவயது தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார்.

தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: “ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் கடினமானதாக இருந்தது. ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஆர்ச்சர் மற்றும் பர்கர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அந்த மிதவேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆடுகளம் சாதகமாக இருந்தது.

எது எப்படி இருந்தாலும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இறுதிவரை களத்தில் இருந்திருக்க வேண்டும். அதன் மூலம் 150-160 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால், இன்றைய டி20 கிரிக்கெட் வடிவத்தில் எது நல்ல ஸ்கோர் என நாம் கணிக்க முடியாது. அதுவும் இம்பாக்ட் பிளேயர் விதி இருக்கும் போது இந்த ரன்கள் போதும் என சொல்ல முடியாது.

எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். அதனால் இது பதற்றமான தொடக்கமாக இருக்கலாம். தவறுகளுடன் சீசனை தொடங்கி உள்ளோம். நிச்சயம் இது எங்களுக்கு படிப்பினையாக அமையும். நாங்கள் எங்கள் ஆட்டத்தில் நிச்சயம் முன்னேற்றம் காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *