மும்பை,
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி – போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். இவர்களில் ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அடுத்து எல்லிஸ் பெர்ரி களமிறங்கினார். இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட லிட்ச்பீல்ட் – பெர்ரி ஜோடி விரைவாக ரன் குவித்தது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.
அதிரடியாக ஆடிய லிட்ச்பீல்ட் வெறும் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் பெர்ரி அரைசத்தை நோக்கி முன்னேறினார். 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை அமன்ஜோத் கவுர் பிரித்தார். அவரது பந்துவீச்சில் லிட்ச்பீல்ட் 119 ரன்களில் போல்டானார். சிறிது நேரத்திலேயே பெர்ரி அரைசதம் அடித்தார்.
பின்னர் வந்த பெத் மூனி 24 ரன்களிலும், அன்னபெல் சுதர்லண்ட் 3 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாட ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இதனிடையே பெர்ரி 77 ரன்களில் அவுட்டானார்.
இறுதி கட்டத்தில் கார்ட்னர் (63 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. 49.5 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
அடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா (10 ரன்), ஸ்மிர்தி மந்தனா (24 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.
3-வது விக்கெட்டுக்கு ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ரன்ரேட்டை 6-க்கு குறையாமல் நகர்த்தினர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினர்.
வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்ட இந்த ஜோடி ஸ்கோர் 226-ஐ எட்டிய போது பிரிந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களில் (88 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா 24 ரன்னில் ரன்-அவுட் ஆனார்.
இதற்கிடையே ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார் . 6-வது வரிசையில் இறங்கிய ரிச்சா கோஷ் 16 பந்தில் 26 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்து நெருக்கடியை குறைத்தார்.
மறுமுனையில் அட்டகாசமாக ஆடிய ஜெமிமா அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார். இறுதியில் அமன்ஜோத் கவுரின் பவுண்டரியுடன் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும் (134 பந்து, 14 பவுண்டரி), அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், வெற்றி தொடர்பாக பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறியதாவது,
முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், இது ஒரு கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது.
கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்.
அணியின் வெற்றிக்கு நான் க்ரெடிட் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, எதையும் தனி ஒரு ஆளாக செய்யவில்லை. நான் சோர்வடையும்போது சக வீராங்கனைகள் என்னை ஊக்குவிப்பார்கள்.
சற்று பதட்டமாக இருந்த நேரத்தில் தீப்தி என்னை ஊக்கப்படுத்தினார்.என தெரிவித்துள்ளார் .