கிறிஸ்தவர்கள் புனித நாளாகக் கருதும் பெரிய வியாழன் தினமான இன்று தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் !!

திருச்சி:
கிறிஸ்தவர்கள் புனித நாளாகக் கருதும் பெரிய வியாழன் தினமான இன்று (ஏப். 2) தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தவெக தலைவர் விஜய் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ஏற்கெனவே பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று (ஏப்.02) அவர் கிறிஸ்தவர்கள் புனித நாளாக கருதும் பெரிய வியாழன் தினத்தன்று திருச்சி கிழக்கில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய், திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10.30 மணி அளவில் வந்தடைந்தார்.

விஐபி லாஞ்சில் சற்று நேரம் இருந்த அவரிடம், வேட்புமனுவுக்கு உண்டான படிவங்களில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கையெழுத்து பெற்றனர். அங்கிருந்து காலை 11.10 மணிக்கு புறப்பட்ட விஜய் பிரச்சார வேனின் முன் பகுதியில் அமர்ந்தார்.

அவர் செல்லுகின்ற வழியெங்கும் திரண்டு இருந்த தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்தப்படியே சென்றார்.

திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு அலுவலகத்திற்கு விஜய் சென்றடைந்தபோது, சுயேட்சை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தார்.

அதனால் வேனில் அமர்ந்தபடியே காத்திருந்தார். சுயேட்சையின் வேட்புமனு தாக்கல் முடிந்தபிறகு, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி உதவி ஆணையருமான முத்து முருகேச பாண்டியிடம் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் தவெக முக்கிய நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விஜய்க்கு மாற்று வேட்பாளராக கு.பா. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

விஜய் வருகையையொட்டி மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *