மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி-க்கு எதிர்ப்பு!!

மதுரை
புதிய நீதிக்கட்சி அமைப்புச் செயலாளர் விலகல் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டதால் அந்தத் தொகுதியை தனக்காக எதிர்பார்த்திருந்த அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் வி.எஸ்.கார்த்தி கட்சியிலிருந்து விலகினார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டார்.

இதை ஏற்கமுடியாமல் புதிய நீதிக் கட்சியின் அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் வி.எஸ்.கார்த்தி அக்கட்சியிலிருந்து விலகி ஏ.சி.சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வி.எஸ்.கார்த்தி மதுரையைச் சேர்ந்தவர். அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட முடிவு செய்து கடந்த 2 ஆண்டுகளாக தொகுதியில் களப்பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் மதுரை சுற்றுச் சாலையில் 150 அடி உயர வ.உ.சி சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கார்த்தி முன்னின்று நடத்தினார்.

அந்த விழாவில் இயக்குநர் சுந்தர்.சி-யும் பங்கேற்றார். இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதியில் தானே வேட்பாளராக அறிவிக்கப்படுவோம் என வி.எஸ்.கார்த்தி எதிர்பார்த்திருந்தார்.

ஆனால், அவரை ஒதுக்கிவிட்டு இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கட்சியை விட்டே விலகி இருக்கிறார் கார்த்தி. இவரைத் தொடர்ந்து இவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இது குறித்து மதுரையைச் சேர்ந்த புதிய நீதிக் கட்சி நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், “வ.உ.சி சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு மதுரையில் பிரதமர் மோடியை ஏ.சி.சண்முகத்துடன் சென்று கார்த்தியும் சந்தித்தார்.

அப்போது அவரை மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் என பிரதமரிடம் ஏ.சி.சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார்.

கார்த்தி பெயர்தான் வேட்பாளர் பட்டியலில் முதலில் இருந்தது. ஆனால் திடீரென சுந்தர்.சி வேட்பாராக அறிவிக்கப்பட்டதை கார்த்தி தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *