சென்னை
சென்னை சேப்பாக்கத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்னொரு கிங்ஸ் அணியான பஞ்சாப் கிங்ஸ் பந்தாடியுள்ளது. குறிப்பாக சேசிங்கில் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணியே கிங் ஆகத் திகழ்கிறது.
நேற்றைய வெற்றியுடன் சேர்த்து 9-வது முறையாக 200+ இலக்கை வெற்றிகரமாக விரட்டி விரட்டல் கிங்ஸ் ஆகியுள்ளது பஞ்சாப் கிங்ஸ். பிரியவன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயஸ் அய்யர் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் செய்தனர்.
பஞ்சாப் அணியின் முதல் 50 ரன்கள் 4 ஓவர்களில் வந்த போது பிரியவன்ஷ் ஆர்யா 9 பந்துகளில் 33 என்று காட்டடி தர்பார் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது 5 பந்துகளில் 4 ரன்களில் இருந்த அய்யர் பிறகு 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
209 ரன்கள் இந்தப் பிட்சில் போதாமல் போனதற்குக் காரணம் மொத்தம் இன்னிங்சிற்கு 120 பந்துகளில் 40 பந்துகளை டாட் பாலாக்கி விட்டது சிஎஸ்கே. மாறாக பஞ்சாப் கிங்ஸ் அணி 34 பந்துகளையே டாட் பாலாக்கியது.
சிஎஸ்கேவுக்குச் சாதகமான பிட்ச்தான். மட்டையை நேராக பந்தின் மீது செலுத்தி தூக்கி அடிக்கும் பிட்ச்தான்.
ஆனால் தனது பலத்தின் மடியிலேயே சிஎஸ்கே தோற்றது நிச்சயம் அவ்வணி நிர்வாகத்திற்கும் ருதுராஜ் கெய்க்வாடுக்கும் பெரிய தலைவலியே. எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடர்ச்சியாக 4 வது வெற்றியை சிஎஸ்கேவுக்கு எதிராகப் பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ். சிஎஸ்கே அணியில் சாம்சன் மந்தமாக மாத்ரே வெளுத்து வாங்கினார்.
ஆயுஷ் மாத்ரே முதல் போட்டியில் அருமையான பவுன்சரில் ஹூக் மாட்டாமல் கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனார். அதன் பிறகே மைக் ஹஸ்ஸி அவருக்கு ஷாட் பாலை ஆடும் பயிற்சி அளித்தார், அது நேற்று பயனளித்தது, இரண்டு ஃபுல் பந்துகளை நேராகத் தூக்கி அடித்த பிறகே ஷார்ட் பிட்ச் பந்தை விரைவில் திரும்பி புல்ஷாட் பறக்க விட்டது மாத்ரே விரைவில் கற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த மாணவர் என்பது தெரிந்தது.
43 பந்துகளில் மாத்ரே 6 நான்குகள் 5 ஆறுகள் என்று கலக்கி ஆட்டமிழந்த தருணத்தில்தான் சிஎஸ்கே 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
சிஎஸ்கே 200 ரன்களை எட்டுவது சிரமம் என்றே புரொஜெக்ஷன்கள் காட்டின. அதாவது 185 ரன்களைத்தான் சிஎஸ்கே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றியவர் சர்பராஸ் கான்.
12 பந்துகளில் 32 என்பது அந்தச் சமயத்தில் வெற்றிக்கான இன்னிங்ஸ்தான். அனைத்து பவுண்டரிகளும் மிகக் கூலாக ஆடி அடிக்கப்பட்டவையாகும்.
குறிப்பாக பவுன்சர் ஒன்றை விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் தூக்கி அடித்த சிக்ஸ் அதியற்புதமான ஸ்டன்னிங் ஷாட். இவரால்தான் ஸ்கோர் 200 ரன்களைக்கடந்தது.
ஆனால் 209 வெற்றியாக மாறாததற்குக் காரணம், சிஎஸ்கே பந்து வீச்சில் தாக்கம் எதுவும் இல்லை. அங்கு சர்பராஸ் என்றால் பஞ்சாப் அணியில் பிரியவன்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 39 ரன்களை விளாசித்தள்ளினார்.
கடந்த ஆண்டு சதம் அடித்து சிஎஸ்கேவை கடுப்பேற்றினார், இந்த முறை 11 பந்துகளிலேயே சிஎஸ்கேவை மூட்டைக் கட்டினார்.
சேசிங்கின் எந்தக் கட்டத்திலும் பஞ்சாப் தோற்று விடும் என்ற நிலையே இல்லை. சிஎஸ்கே பவுலிங் எந்தவித பிரஷரையும் உருவாக்கவில்லை. ராகுல் சாஹர் வந்தார் ஸ்ரேயஸ் அய்யார் 2 சிக்சர்களை விளாசி பிறகு 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன் பிறகே பஞ்சாபைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஷிவம் துபேவுக்கு ஓவர் கொடுக்கவில்லை. மேட் ஹென்றி, கலீல் அகமட், அன்ஷுல் காம்போஜ், ராகுல் சாஹர் எல்லோருக்கும் செம சாத்து நடந்தது. நூர் அகமது விக்கெட் எடுப்பது போலவே வீசவில்லை.
சிஎஸ்கே அடுத்த போட்டியை ஆர்சிபி அணியுடன் பெங்களூரில் ஆடுகிறது. ஆட்டத்திறன், பவுலிங், உத்தி என்று சிஎஸ்கே பெரிய அளவில் மேம்பட்டாலே தவிர கோலியின் ஆர்சிபியை வீழ்த்துவது கடினமே.
நான் விளையாடுவது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; நான் அடைந்த வெற்றிகளால் அவர்கள் பொறாமை அடைந்திருக்கலாம் – அஜிங்க்ய ரஹானே ஆதங்கம்!!
கொல்கத்தா:
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.
நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் தோல்வி கண்டிருந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிராக 227 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் அஜிங்க்ய ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பின் ஆலன் 28 ரன்களும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 52 ரன்களும் சேர்த்தனர்.
கேமரூன் கிரீன் 2 ரன்களில் வெளியேறினார். தோல்விக்கு பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியதாவது: சிலர் எனது ஸ்டிரைக் ரேட் பற்றி விமர்சிக்கிறார்கள். கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் நான் சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறேன். என்னைப் பற்றி பேசுபவர்கள் போட்டியைப் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. அல்லது எனக்கு எதிராக ஒரு முடிவினை வைத்திருக்கலாம்.
நான் விளையாடுவது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நான் அடைந்த வெற்றிகளால் அவர்கள் பொறாமை அடைந்திருக்கலாம். அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. என்னைப் பற்றி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சிலர் பேசுகிறார்கள். எப்படியோ என்னைப் பற்றி பேசுகிறார்களே அதுவே மகிழ்ச்சி. என் திறமை மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் பேசட்டும். இவ்வாறு ரஹானே கூறினார்.