கொல்கத்தா:
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.
நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் தோல்வி கண்டிருந்தது.
ஹைதராபாத் அணிக்கு எதிராக 227 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் அஜிங்க்ய ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பின் ஆலன் 28 ரன்களும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 52 ரன்களும் சேர்த்தனர்.
கேமரூன் கிரீன் 2 ரன்களில் வெளியேறினார். தோல்விக்கு பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியதாவது: சிலர் எனது ஸ்டிரைக் ரேட் பற்றி விமர்சிக்கிறார்கள்.
கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் நான் சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறேன். என்னைப் பற்றி பேசுபவர்கள் போட்டியைப் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. அல்லது எனக்கு எதிராக ஒரு முடிவினை வைத்திருக்கலாம்.
நான் விளையாடுவது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நான் அடைந்த வெற்றிகளால் அவர்கள் பொறாமை அடைந்திருக்கலாம். அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.
என்னைப் பற்றி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சிலர் பேசுகிறார்கள். எப்படியோ என்னைப் பற்றி பேசுகிறார்களே அதுவே மகிழ்ச்சி.
என் திறமை மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் பேசட்டும். இவ்வாறு ரஹானே கூறினார்.