கோவை
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத்
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணா திமுக வேட்பாளர் எஸ்.
பி.வேலுமணி தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன்படி தொண்டாமுத்தூர்சட்டமன்றத் தொகுதி பேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலாந்துறை,மத்வராயபுரம், இருட்டு பள்ளம்,
சாடி வயல், சர்க்கார் பதி, செம்மேடு,முள்ளங்காடு, ஈசா, நரசீபுரம்,
விராலியூர், தேவராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்ணா திமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, திரைப்பட நடிகர் சரவணன்,
இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கடந்த
அண்ணா திமுக ஆட்சியில் செய்த சாதனைகளைப் பட்டிய லிட்டதுடன், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
பிரச்சாரத்தில் பேசிய எஸ். பி.வேலுமணி, “நான் மீண்டும்
சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் விடுபட்ட அனைத்துப் பணிகளையும் முடிப்பேன்.
கடந்த காலத்தில் நரசீபுரம் முதல் பூண்டி வரை நீண்ட காலமாகப் போடப்படாமல் இருந்த சாலைகளைப் போட்டுக் கொடுத்தோம். தடுப்பணைகள், செக் டேம்கள் கட்டினோம்.
நமது தொகுதிக்கு ரூ.9 கோடியில் கல்லூரியைக் கொண்டு வந்தோம்.
தீயணைப்பு நிலையம், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம் என அடுக்கடுக்கான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம்“ என்றார்.
மேலும், சிறுவாணி குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க 50 கி.மீ தூரத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்ததை நினைவுகூர்ந்த அவர், “நாங்கள் செய்த திட்டங்களைச் சொல்லி வாக்குக் கேட்கிறோம், ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக இந்தத் தொகுதிக்கு என்ன செய்தது?” என கேள்வி எழுப்பினார்.
பேருந்துகளை குறைத்த திமுக அண்ணா திமுக ஆட்சியில்
கோவையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதைச்
சுட்டிக்காட்டிய அவர்: சென்னையை விட அதிகப்படியாக
அவிநாசி சாலை (10 கி.மீ), மேட்டுப்பாளையம் சாலை மற்றும் திருச்சி சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.
தொண்டாமுத்தூர் பகுதியில் மட்டும் 3 அரசு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை அரசு மருத்துவமனையைத் தனியார் மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயர்த்தினோம். நாங்கள் கொண்டு வந்த 52 பேருந்துகளில், தற்போது 30 பேருந்துகளை திமுக அரசு நிறுத்திவிட்டது என வருத்தம் தெரிவித்தார்.
கொரோனா பேரிடர் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் எனது
சொந்தக் குடும்பமாகப் பார்த்தேன்.
எனது குடும்ப அறக்கட்டளை மூலம் தினசரி ஒரு லட்சம் பேருக்கு உணவு, காய்கறிகள், முட்டை மற்றும் சத்து மாத்திரைகளை ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி வழங்கினோம்.
ஆனால், திமுக ஆட்சியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள்
உயிரிழந்ததை நாடு அறியும்“ என அவர் குற்றம் சாட்டினார்.
உரிமைத்தொகை எப்படி வந்தது?
மகளிர் உரிமைத் தொகை குறித்துப் பேசிய அவர், “சட்டமன்றத்தில் நாங்கள் குரல் கொடுத்த பிறகுதான் உரிமைத் தொகையை
வழங்கினார்கள்.
அதுவும் 28 மாதங்கள் கழித்துக் கொடுத்துவிட்டு
மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஆனால், எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப் பேற்றதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்
ரூ.2,000 வழங்கப்படும். ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டித் தரப்படும்,” என உறுதியளித்தார்.
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும், எடப்பாடியார் காலத்திலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
அண்ணா திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் காவல்துறை முறையாகக் கண்காணிக்கப்பட்டு, பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும். உங்கள் வீட்டுச் சகோதரனாக நான்
என்றும் இருப்பேன்.
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து எடப்பாடி யாரை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும்“ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்து உரையை நிறைவு செய்தார்.