வயநாடு:
கேரளாவில் சுரங்கப்பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 265 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கனமழையால் வயநாட்டின் மேப்பாடி சுரங்கப்பாதை திட்டம் அருகே உள்ள கள்ளாடியில் நேற்று பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையினருடன் இணைந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவைத் தொடர்ந்து, கேரள முதல்வர் வி.டி. சதீசன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் ஏ.பி. அனில் குமார் மற்றும் டி. சித்திக் ஆகியோரை நேரில் சென்று பார்வையிடுமாறும் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் டி. சித்திக் கூறும்போது, “இது இயற்கையான நிலச்சரிவு அல்ல, அதிகாரிகளின் அலட்சியத்தால் மனிதனால் உருவான நிலச்சரிவு.
இந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொங்கன் ரயில்வேக்கு எழுத்துப்பூர்வமாக எச்சரித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், கோழிக்கோடு மற்றும் வயநாட்டிலிருந்து கூடுதலாக 60 என்டிஆர்எப் வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார்.
கல்லாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் மானந்தாவடியில் 64 மி.மீ. மழையும், வைத்திரியில் 123 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.