டெஹ்ரான்:
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது:
எங்கள் எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்கமாட்டோம்.
இந்த ஜலசந்தி தொடர்ந்து எங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.
சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என்று அமெரிக்கா அறிவித்திருப்பது, கடல் கொள்ளைக்கு சமம் ஆகும்.
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் பெர்சிய வளைகுடா, ஓமன் கடல் பகுதியில் உள்ள அனைத்து துறைமுகங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும்.
எங்கள் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை மிகக் கடுமையாக தாக்குவோம். இவ்வாறு இப்ராகிம் தெரிவித்தார்.
போர் மூளும் அபாயம்: இதுதொடர்பாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது:
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். அமெரிக்கா, ஈரான் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து மீண்டும் மிகப்பெரிய அளவில் போர் மூளும்.
ஈரான் ராணுவத்திடம் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் இல்லை. ஆனால் 5,000-க்கும் மேற்பட்ட அதிவிரைவு போர் படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் ஈரான் ராணுவம் கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்ளும்.
மேலும் கடல் கண்ணி வெடிகள், ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும்.
ஈரான் எல்லையில் இருந்து 10 மைல் தொலைவு வரையிலான பகுதிக்குள் நுழையும் போர்க்கப்பல்கள், எதிரிகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அந்த நாட்டு ராணுவ தலைமை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்து உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.