சென்னை:
வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் மின்சார ரயில் சேவை தொடங்கி 42 நாட்களை கடந்த நிலையில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது நாள்தோறும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
இத்தடத்தில் உள்ள புழுதிவாக்கம் நிலையத்தில் மின்தூக்கி, நகரும் படிக்கட்டு போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் பொது போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது புறநகர் மின்சார ரயில் சேவை. சென்ட்ரல், கடற்கரை நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் கடற்கரை – வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் வழித்தடத்தில் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
இதற்கிடையே, சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தின் விரிவாக்கமாக, வேளச்சேரி – பரங்கிமலை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மார்ச் 14-ம் தேதி ரயில் சேவை தொடங்கியது.
இந்த வழித்தடம் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பேருதவியாக உள்ளது. இத்தடத்தில் ஆரம்பத்தில் தினசரி 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் பயணித்தனர்.
இது படிப்படியாக அதிகரித்து, தற்போது தினசரி 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்வதால் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையத்தில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் மூலமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களுக்கு எளிதில்செல்ல முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தடத்தில் தினசரி பயணிப் போர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதம்பாக்கம் நிலையம் அதேநேரம், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என்றும், புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.சிவக்குமார் கூறும்போது, ‘‘பரங்கிமலை – வேளச்சேரி தடத்தில் உள்ள புழுதி வாக்கம் நிலையம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. ஆனால், இந்த நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டு வசதிகளை ஏற்படுத்தி, முறையாகப் பராமரிக்க வேண்டும்.
ரயில் நிலையம், தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பேணப்பட வேண்டும். அதேபோல், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, “புழுதிவாக்கம் நிலையத்தில் மின்தூக்கி, நகரும் படிக்கட்டு போன்ற வசதிகளை ஏற்படுத்தும் பணி செயல்பாட்டில் உள்ளது.
ஆதம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படும்” என்றனர்.