சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி செய்கின்றனர் – காலணி வீச்சுக்கு திருமாவளவன் கண்டனம்!!

சென்னை:
சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி செய்கின்றனர்.

ராகேஷ் கிஷோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயற்சித்துள்ளார்.

தலைமை நீதிபதி மீது இயல்பிலேயே உள்ள வன்மம்தான் இதற்கு காரணம். தலைமை நீதிபதி கவாய் பவுத்தத்தை தழுவியவர் என்றாலும் அவர் ஒரு அம்பேத்கர் சிந்தனையாளர்.

பவுத்தத்தை தழுவியதால் அவர்கள் தலித் ஆக மாட்டார்கள் என ராகேஷ் கிஷோரே கூறியுள்ளார்.

பவுத்தத்தை தழுவியவர்களை இட ஒதுக்கீடு பெறும் பிரிவினராக அங்கீகரித்துள்ளனர். அகில இந்திய அளவில் பவுத்தம் தழுவிய அனைவரையுமே பட்டியல் சமூக பிரிவினராக அங்கீகரித்து சலுகைகளை வழங்குகின்றனர்.

சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படிச் செய்கின்றனர். திட்டமிட்டு தூண்டப்பட்ட நிலையில்தான் ராகேஷ் கிஷோர் இப்படிச் செய்துள்ளார்.

தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து இன்று விசிக வழக்கறிஞர் அணி எனது தலைமையில் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ராகேஷ் கிஷோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் கரூர் சம்பவம் பற்றி பேசுகையில், “கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அகல் விளக்கு ஏற்றி வணக்கம் செலுத்தினோம்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விசிக சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வருகின்ற 11-ம் தேதி வழங்கவுள்ளோம். தமிழக அரசு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதனை கூடுதலாக்கி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முயற்சிக்கின்றன, அது ஏற்புடையதல்ல.

நடிகர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. அவரை கைதுசெய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை.

ஆனால், அவர் இச்சம்பவத்துக்கு தார்மீக பொறுப் பேற்க வேண்டும். அவர் பொறுப்பேற்காததால்தான் நாங்கள் எங்கள் விமர்சனத்தை முன்வைக்கிறோம்.

தமிழக அரசும், காவல்துறையும் நேர்மையாக இந்த பிரச்சினையை அணுகிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம்.

அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்துள்ளதும், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்துள்ளதையும் ஆறுதல் அளிப்பதாக பார்க்கிறோம்.

விஜய்க்கு மட்டுமல்ல, பொதுவாழ்க்கையில் உள்ள ஒவ்வொருவருக்கான பாடமாக இதை பார்க்கிறோம்.” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *