ஹர்தோய்:
உத்தரப் பிரதேசத்தை இழிவாகப் பேசி அரசியல் செய்யும் திமுகவுடன், சமாஜ்வாதி கட்சி கைகோத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ரூ.36,230 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 594 கிலோ மீட்டர் தொலைவிலான கங்கா ஆறுவழி விரைவுச்சாலை திட்டத்தை அம்மாநிலத்தின் ஹர்தோய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மேற்கு வங்கத்தில் தற்போது இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தைப் போலவே இரண்டாம் கட்டத்திலும் மக்கள் பெருமளவில் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
60, 70 வருடங்களாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் அச்சமற்ற ஒரு சூழலில் வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எவ்வித அச்சமும் இன்றி மக்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
நேற்றுதான் குஜராத் மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து, வட்டாரப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இதில், 80 முதல் 85% வரையிலான நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் பாஜக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்யப் போகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நமது உறுதியை மேலும் வலுப்படுத்தும்.
தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள கங்கா விரைவுச் சாலை மீரட்டைத் தாண்டி ஹரித்துவார் வரை நீட்டிக்கப்படும். இதன் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், ஃபரூக்காபாத் இணைப்பு விரைவுச் சாலை ஒன்று அமைக்கப்படும்.
இது மற்ற விரைவுச்சாலைகளுடன் இணைக்கப்படும். இதுவே இரட்டை இன்ஜின் அரசின் தொலைநோக்குப் பார்வை. இதுவே பாஜக அரசின் செயல் வேகம்.
இதுவே பாஜக அரசின் பணிமுறை. சில நாட்களுக்கு முன்புதான் டெல்லி – டேராடூன் விரைவுச்சாலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு சாலையை அமைக்க பல பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்த காலம் இப்போது மலையேறிவிட்டது.
முன்பு ஒரு சாலைத்திட்டம் அறிவிக்கப்பட்டால் அது பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். பல அரசுகள் மாறி மாறி வந்தாலும் அந்த திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் தென்படாது.
ஆனால், இரட்டை இன்ஜின் அரசில் அடிக்கல் நாட்டுவதும் திட்டத்தை திறந்து வைப்பதும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செவ்வனே நிறைவு செய்யப்படுகின்றன.
அதிகாரத்தை இழந்த சமாஜ்வாதி கட்சி, உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் உத்தரப் பிரதேசத்தை மீண்டும் பழைய இருண்ட காலத்துக்கே இழுத்துச் செல்ல விரும்புகிறார்கள்.
அவர்கள் மீண்டும் சமூகத்தை பிளவுபடுத்தி சிதைக்க துடிக்கிறார்கள். சமாஜ்வாதி கட்சிக்கு வளர்ச்சிக்கு; பெண்களுக்கு எதிரானது. சமீபத்தில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் உண்மையான முகத்தை நாடு மீண்டும் ஒருமுறை கண்டது.
மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
அந்த மசோதா நிறைவேறி இருந்தால் 2029 ம் ஆண்டு தேர்தலில் இருந்தே மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் நமது தாய்மார்கள் மற்றம் சகோதரிகளுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சென்றிருப்பார்கள்.
இத்தனைக்கும், விகிதாச்சாரத்தில் எந்த மாற்றமும் இன்றி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்திருந்தோம்.
ஆனால், உத்தரப் பிரதேசத்தை இழிவாகப் பேசி அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகள், உத்தரப்பிரதேசத்துக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்போவதாகக் கூறி எதிர்த்தன.
நாடாளுமன்றத்தில் அந்த கட்சிகளின் மனநிலையே சமாஜ்வாதி கட்சியின் குரலாகவும் ஒலித்தது.
இங்கிருந்து (உத்தரப்பிரதசேத்தில் இருந்து) உங்கள் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள், அங்கே உத்தரப் பிரதேச மக்களை இழிவாகப் பேசுபவர்களுடன் கைகோத்து நிற்கிறார்கள்.
சமாஜ்வாதி கட்சியால் ஒருபோதும் வாரிசு அரசியலையும் சாதிய அரசியலையும் கடந்து மேலே உயரவே முடியாது.
இன்று உலகம் முழுவதும் போர், அமைதியின்மை மற்றும் நிலையற்ற தன்மையால் எவ்வாறு சிக்கித் தவிக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் காண்கிறீர்கள். உலகின் முக்கிய நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
ஆனால் இந்தியா மட்டும் தனது வளர்ச்சிப் பாதையில் அதே வேகத்துடன் முன்னேறிச் செல்கிறது. இந்தியாவின் இந்த வளர்ச்சியை வெளிநாட்டு எதிரிகள் விரும்புவதில்லை.
அதேநேரம், அதிகார வெறி கொண்ட உள்நாட்டு சக்திகள் சிலவும் இந்தியாவை வீழ்த்த முயன்று வருகின்றன. இருப்பினும் நாம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சியில் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறோம்.
தற்சார்பு இந்தியா எனும் லட்சியப் பயணத்தை நோக்கி நாம் உறுதியுடன் முன்னேறிச் செல்கிறோம். நாம் மிகவும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைத்து வருகிறோம்.
அந்த திசையில் நாம் எடுத்து வைத்துள்ள மற்றொரு வலுவான அடியே கங்கா விரைவுச்சாலை திட்டம்” என தெரிவித்தார்.