தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திரு.வி.க. நகர் தெற்கு பகுதி சார்பில் ஓட்டேரி வாழை மா நகர் மற்றும் புளியந்தோப்பு கீரேக் நகரில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லந்து யார்டுக்கு இணையானது.
அண்ணாமலை போன்ற டுப் போலீஸ் இல்லை. தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையால் கொலை, கொள்ளையர்கள் போன்ற சமூக விரோதிகள் அண்டை மாநிலத்திற்கு குடிப்பெயர்கின்றனர். இதுபோன்ற கள்வர்களிடம் இருந்து பாதுகாப்பதால் காவல்துறையினருக்கு தூக்கம் இருக்காதுதான்.
தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருப்பதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லையென்பதால் அவர்களுக்கு தூக்கம் இருக்காது.
தமிழக வெற்றிக் கழகத்தினர் முதலில் களத்திற்கு வரட்டும். தமிழ்நாட்டின் பி டீம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டின் உரிமை, கொள்கை கோட்பாடுகளில் யார் உறுதியோடு உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜி.எஸ்.டி, நிதியளிக்கவில்லை, வெள்ள நிவாரணம் அளிக்கவில்லையா என்றால் அதுகுறித்து கவலைப்படவில்லை. மத்திய அமைச்சர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி பார்க்க முடிந்தால் அனுப்பி பாருங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யும் வரை எந்த அணியாலும் ஆட்சியை அசைக்க முடியாது.
எத்தனையோ வழக்குகளை சந்தித்த இயக்கம் திமுக. திமுகவிற்கு மடியில் கணமில்லை அதனால் வழியில் பயமில்லை. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் யாரும் அச்சப்பட்டு வீட்டில் அமரும் இயக்கம் திமுக இல்லை. தேர்தலில் வைப்பு நிதியை தக்கவைத்துக் கொள்ள போராடும் ஒரு கட்சியை பார்த்து நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?.
தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாஜகவை பார்த்து அச்சப்படும் அளவிற்கு திமுகவினர் கோழைகள் அல்ல. திமுக ஒன்றும் சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தை நடத்தவில்லை. ஒரு கண்ணத்தை அறைந்தால் மறு கண்ணத்தை காண்பிக்க… திருச்செந்தூரில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்போதே சிலர் வந்து அவரது மனைவியிடம் பேசி பேட்டியளிக்க கூறுகின்றனர்.
கூட்ட நெரிசலால் உயிரிழப்பு நிகழவில்லை. கோயிலின் பாதுகாப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை. திருச்செந்தூர் கோயிலின் பணிகளுக்கு அவதூறு கற்பிக்கும் வகையில் இயற்கை மரணங்களுக்கு துறைமீது கலர்பூச முற்படுபவர்களின் நாடகம் எடுபடாது.
இதுபோன்ற செயல்கள் மூலம் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க நினைத்தால் முதலமைச்சர் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்” என்றார்.