58 கிராமங்கள் இணைந்து கொண்டாடிய பாரம்பரிய `வெற்றிலைப்பிரி விழா’

மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையாக கொண்டு சுற்றி உள்ள 58 கிராமங்கள் இணைந்து வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளலூர்நாடு வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி என 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மூண்டவாசி, வேங்கைப்புலி, சமட்டி, நைக்கான், சாவடைதாங்கி, வெக்காளி, சலிப்புளி, திருமான், செம்புலி, நண்டன்கோப்பன், பூலான் மலவராயன் என 11 கரைகளாக மக்கள் வாழ்கின்றனர்.

ஆண்டுதோறும் இங்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி வெள்ளலூர் கருங்கல் மந்தையில் நாட்டார்கள் அனைவரும் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம். அதாவது வீடுதோறும் வெற்றிலைகளை வழங்கி அதை வைத்து வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழாவாகும்.

அதன்படி நேற்று வெற்றிலைப்பிரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கருங்கல் மந்தை முன்பு நாட்டார்கள் வழிபாடு செய்தனர். பின் அருகில் உள்ள சுனை பாறையில் தமிழ் எழுத்து ப வடிவில் அம்பலகாரர்களும், இளங்கச்சிகளும், பொதுமக்களும் அமர்ந்தனர்.

குவித்து வைக்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை பிரித்து முதலில் விவசாய பணிகளில் முக்கிய உதவிகள் செய்பவர்களுக்கு வெற்றிலைகள் வழங்கப்பட்டன. பின்னர் பாரம்பரிய வழக்கப்படி 11 கரையினருக்கும், 5 மாகாணத்திற்கும் வெற்றிலை கட்டுகள் வழங்கப்பட்டு அந்த வெற்றிலைகள் ஆங்காங்கே தனித்தனியாக 56 கிராமத்தினர்களும் வெற்றிலைகளை வாங்கி சென்றனர்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் அந்த வெற்றிலைகளை தங்களுடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கி கலப்பை, மண்வெட்டி, நெல் அளக்க பயன்படும் மரக்கால், கடப்பாரை ஆகியவற்றின் முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்ட இயற்கை உரங்களை எடுத்து அவரவர்களின் வயல்களில் கொட்டி நிலத்தை உழுது விவசாய பணிகளை தொடங்கினர். இவ்வாறு செய்வதால் ஆண்டுதோறும் மழை பெய்து, செல்வம் செழித்து விவசாயம் நன்றாக நடைபெறும் என்பது இப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கை ஆகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *