பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து!!

சென்னை:
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள்.95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அன்பில் மகேஷ் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள். கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.

அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம்.

அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்: மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக +2 தேர்ச்சி விகிதத்தில் 0.17% உயர்வு.

அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று SLAS அறிக்கையை முன்னிறுத்தி, தலைமையாசிரியர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக அவர்கள் முன்னெடுத்த முயற்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

மாணவச் செல்வங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்வு முடிவுகள் என்பது உங்களுக்கானது மட்டுமல்ல. எங்களுக்குமானதுதான்.

மறுவாய்ப்பு தேவைப்படும் மாணவர்கள் உடனடியாக துணைத் தேர்வெழுதி வெற்றி பெற வாழ்த்துகள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *