சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது.
அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார்.
இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5-ன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை 6 பகுதிகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிட்டு சபாநாயகர் அழைத்தார்.
இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த தீர்மானத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரித்தது.
வேலுமணி தரப்பில் ஹரி, எஸ்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, இரா.காமராஜ், சத்தியபாமா, லீமா ரோஜ், மரகதம் குமரவேல்,சுகுமார், சேகர், திலீபன் ஜெய்சங்கர், நட்ராஜ், நத்தம் விஸ்வநாதன், க.மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஜெயக்குமார், அருள்மொழித் தேவன், சி.வி.சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், இ.சி.கோவிந்தராஜன், சு.பழனிசாமி, ராமச்சந்திரன், உஷாராணி, ஜெயசுதா, சம்பத் குமார், தளவாய் சுந்தரம், நல்லதம்பி, ராஜசேகர், ராஜேந்திரன், கோ.வெங்கடாசலம், வெற்றிவேல், வேலழகன், ஜெயசங்கரன் உள்ளிட்டோர் தீர்மானத்தை எதிர்த்தனர். பாமக, பாஜக இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது.
இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
5 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது என்ன?- புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் கூடியது.
அவை கூடியதும், தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். அதன்பின்னர், பேரவையில் விவாதம் தொடங்கியது.
தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் – கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் தவெக அரசுக்கு ஆதரவை அறிவித்தார்.
அவர் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளிடம் மட்டுமே விஜய் ஆதரவு கோரினார்.
அந்த வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் என்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் காலூன்ற விரும்பிய பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்தச் சூழலில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.
எங்களின் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தவெக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி எம்எல்ஏ செல்லசாமி பேசுகையில், “தவெக-வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவை சிபிஎம் ஆதரிக்கிறது.
இந்த அரசு மதச்சார்பின்மை, கூட்டாட்சி, தமிழக சட்டமன்றத்தின் மான்புகளை உயர்த்திப் பிடிக்க வேண்டி இந்த அரசுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.
விசிக எம்எல்ஏ வன்னியரசு பேசுகையில், “தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று 5 ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தும் என நான் நம்புகிறேன். முன்கூட்டியே அதற்கு வாழ்த்துகிறேன்.
பாஜகவின் செயல்திட்டமான ஆளுநர் ஆட்சியைத் தடுக்கும் வகையில் தவெகவுக்கு விசிக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தவெக அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிராக செயல்பட வேண்டும், தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகிறோம்.
மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற முந்தைய நலத் திட்டங்கள் தொடர வேண்டும்” என்றார்.
ஐயூஎம்எல்ஏ எம்எல்ஏ ஷாஜஹான் பேசுகையில், “மக்களின் மவுனப் புரட்சி இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு வரலாற்று ஆச்சர்யம் தான்.
வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடங்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூடலை வரவேற்கிறோம்.
மதச்சார்பின்மையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.
முதல்வர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தது வாழ்த்துகளுக்கு உரியது” என்றார்.
அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “முதல்வர் விஜய்யை ஆளுமை மிக்கவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர்.
அதனாலேயே திருச்சியில் 400 ரவுடிகள் சரணடைந்துள்ளனர். தவெகவுக்கு நேற்றும், இன்றும், நாளையும் எனது ஆதரவு உண்டு,” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் பேசுகையில், ”குடியரசுத் தலைவர் ஆட்சி மூலம் பாஜக கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சி செலுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்துள்ளோம்.
ஒன்றிய அரசு மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது. அதற்கு எதிராக முதல்வர் விஜய் துணிவோடு செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார்.
பிரேமலதா கண்டனம்:
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசுகையில், “எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பை கடைப்பிடித்துள்ளீர்கள். அதற்கு வாழ்த்துகள். முதலில் 717 மதுக்கடைகளை மூடியது வரவேற்கத்தக்கது.
அதேவேளையில், இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெறாத குதிரை பேரம் நடந்ததாக வரும் தகவல்களால் நான் மனவேதனை அடைகிறேன்.
ஜோதிடர் ராதன் பண்டிட்டை அரசு அதிகாரியாக நியமித்ததை தமிழக மக்கள் சார்பாக கண்டிக்கிறேன்.
இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பதை நீங்கள் (விஜய்) தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த அரசு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.” என்றார்.
இன்று ஒற்றைத் தாமரைதான்…
பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேசுகையில், “நம்பிக்கை தீர்மானத்தில் எம் எல் ஏக்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் போல் பேசிவிட்டார்கள்.
நான் ஒற்றைத் தாமரை என்றார்கள். நாடாளுமன்றத்தில் 2 பாஜக உறுப்பினர்கள் மட்டுமே ஒரு காலத்தில் இருந்தனர். இன்று மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது,” என்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக நடுநிலை காத்தது.
வாக்கெடுப்பில் விலகி நின்ற பாமக:
பாமக எம் எல் ஏ சவுமியா அன்புமணி பேசுகையில், “சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்பதே பாமகவின் கொள்கை. போதையில்லா தமிழ்நாடு என்பது பாமகவின் நிலைப்பாடு.
பாமக கொள்கைகள் தமிழக நலனை முன்னிறுத்துவது ஆகும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வேண்டும். விகித்தாச்சார பிரதிநித்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.
தனியார் வேலைவாய்ப்பில் 80% தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்றுதல் உள்ளிட்டவை பாமகவின் நோக்கங்கள்.
தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாமக கொள்கைகளை ஒத்துப்போகும் வாக்குறுதிகள் இருந்தன.
தமிழக முன்னேற்றத்திலும், நலனிலும் அக்கறை கொண்டு பாமக வாக்களிப்பதிலிருந்து விலகி நிற்கிறது,” என்றார். பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
தவெக அரசுக்கு அதிமுக ஆதரவில்லை: இபிஎஸ்
இபிஎஸ் – தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்ப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், “அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 47 பேர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றுள்ளனர். தவெக அரசுக்கு 65% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.
அதிமுக அரசின் ஆட்சி காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தது. அரசுப் பள்ளியில் கல்வி கற்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க நீட் தேர்வை எதிர்கொள்ள 7.5 % உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது.
மேலும், அவர்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கல்விச் செலவுகளையும் அரசு ஏற்றது.
அதிமுகவில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்எல்ஏக்கள் ஆகியுள்ளனர், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி ஆளுங்கட்சியினர் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பதாக தகவல் கிடைக்கிறது.
இதனை தூய சக்தி என்று தன்னை கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் ஏற்கக் கூடாது,” என்று பழனிசாமி கூறினார்.
திமுக வெளிநடப்பு:
நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது. சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கண்டித்தார்.
மேலும், திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டங்கள் தொடர வேண்டும் என்றார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார்.
அதில் 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்து கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
மேலும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தலா 2 எம்எல்ஏக்களை கொண்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன.
இதன்மூலம் தவெகவின் பலம் 120-ஆக உயர்ந்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்ததால் கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா நியமிக்கப்பட்டார்.
பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் உட்பட 233 எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மே 13-ம் தேதிக்குள் (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தவெக அரசு பெரும்பான்மையை நிறைவேற்றியது.
பழனிசாமிக்கு ஷாக்! – பெரும்பான்மையை நிரூபிப்பதில் விஜய்க்கு, அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒருதரப்பு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.