பிரசவ காலத்தில் பெண்ணுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாதுகாப்பாக குழந்தை பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டு!!

சென்னை,
பிரசவ காலத்தில் பெண்ணுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாதுகாப்பாக குழந்தை பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கடந்த 16.08.2025 அன்று 00.25 மணியளவில், திருப்பூர் நகரில், வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர்- 1065, கோகிலா, ஒடிசாவைச் சேர்ந்த பாரதி (25) என்பவர் தனது கணவருடன் பயணிகள் ஆட்டோவில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கடுமையான பிரசவ வலியில் இருப்பதை கவனித்தார். உடனடியாக பெண் காவலர் கோகிலா ஆட்டோவில் ஏறி கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவினார்.

வலி மிகவும் கடுமையானதாக மாறியதால் பெண் காவலர் விரைவாக செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பிரசவிக்க உதவினார்.

பின்னர் தாய் மற்றும் புதிதாக பிறந்த பெண் குழந்தை இருவரும் பாதுகாப்பாக திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல நிலையில் அனுமதிக்கப்பட்டனர். பெண் காவலர், கோகிலா முன்பு நர்சிங் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

அவரது விரைவான மற்றும் அர்ப்பணிப்புள்ள நடவடிக்கையை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால், இன்று 20.08.2025 மேற்படி பெண் காவலர் கோகிலாவை சென்னை தலைமை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *