வைகை மற்றும் பெரியாறு அணைகளின் நீர்தேக்கப் பகுதியில் பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது!!

ஆண்டிபட்டி:
வைகை மற்றும் பெரியாறு அணைகளின் நீர்தேக்கப் பகுதியில் பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது 5 மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்தி உள்ளது.

வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சில மாதங்களாக மழை இல்லாததால் நீர்வரத்து வெகுவாய் குறைந்தது.

இந்நிலையில் பாசனம் மற்றும் குடிநீருக்காக நீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டதால் நீர்மட்டம் சரிந்தது.

மேலும் கடந்த மாதம் 20-ம் தேதியில் இருந்து 29-ம் தேதி வரை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லை.

இது போன்ற காரணங்களால் 6 ஆயிரத்து 91 மில்லியன் கன அடி நீர் தேங்கக்கூடிய அணையில் கடந்த 29-ம் தேதி வெறும் 111 மில்லியன் கன அடி நீரே தேங்கி நின்றது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கடந்த 30-ம் தேதி முதல் நீர்வரத்து தொடங்கியது.

ஆரம்பத்தில் விநாடிக்கு 96 கன அடி நீர் வந்த நிலையில் இதன் அளவு சிறிது சிறிதாக அதிகரித்து நேற்று 116 கன அடியாகவும், நீர்மட்டம் 21.75 அடியாகவும் (மொத்த உயரம் 71) உயர்ந்தது.

வறண்ட அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தும், மழைப் பொழிவும் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தேக்கடியில் நேற்று 29.4 மி.மீ, பெரியாறு அணையில் 19.2 மி.மீ, மழையும் பெய்துள்ளது.

வைகை அணை பகுதியில் 13.2 மி.மீ, மஞ்சளாறு அணையில் 4 மி.மீ.மழையும் பதிவாகியுள்ளது.

குறிப்பாக நீர்பிடிப்புப் பகுதிகளிலே மழைப்பொழிவு இருந்துள்ளது. அணைகளை மையப்படுத்தி பெய்து வரும் மழையினால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது 5 மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு தாமதமாகி உள்ளது.

கேரளாவில் நாளை(வியாழன்) பருவ மழை தொடங்குவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்தும், தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் மழைப் பொழிவும் இருக்கும்.

இதன் மூலம் அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது” என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *