டெல்லி ;
இலவச வாக்குறுதிகள் தேர்தலின் புனிதத்தை கெடுப்பதாகவும், இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
“வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட இலவசங்கள் போன்ற ஜனரஞ்சக தந்திரங்களுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைகள் அரசியலமைப்பை மீறுகின்றன. மேலும், தேர்தல் நடைமுறையின் நியாயத்தை சீர்குலைக்கின்றன.
தேர்தலுக்கு முன்னர் இலவசங்களை வழங்குவது வாக்காளர்களை தேவையில்லாமல் திசைதிருப்பும் மற்றும் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாக இலவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பொது நிதியிலிருந்து வழங்கப்படும் இலவசம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்துவதற்கும், தேர்தல்களின் புனிதத்தை பராமரிப்பதற்கும் இந்த நெறிமுறையற்ற நடைமுறையைத் தடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் தனியார் பொருட்களை வழங்குவது அல்லது பொது நிதியைப் பயன்படுத்தி சேவைகளை விநியோகிப்பது அரசியலமைப்பின் 14வது பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளை மீறுகிறது.
தேர்தலுக்கு முன்னர் பகுத்தறிவற்ற இலவசங்களை வாக்குறுதியாக அளிப்பதையோ அல்லது வினியோகிப்பதையோ தடைசெய்ய, தேர்தல் சின்னங்கள் (இடஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை 1968-ல் ஒரு புதிய நிபந்தனையை தேர்தல் ஆணையம் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நாளை இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.