பெங்களூரு:
மேகேதாட்டு அணை திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேகேதாட்டு அணை திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமானது மட்டுமல்ல.
ஒட்டு மொத்த தென்னிந்தியாவுக்கும் நெருக்கமானது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகா தயாராக இருக்கிறது.
இந்த திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். இந்த திட்டத்தால் இரு மாநிலங்களுக்கும் நன்மை ஏற்படும்.
கன்னடர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகாவிலும், கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வாழ்கிறார்கள். நீர் அனைத்து மக்களுக்கும் தேவையான ஒன்று.
மேகேதாட்டு திட்டமானது சம நிலை அணை திட்டமாகும். அங்கு நீரை தேக்கினால் வறட்சி காலத்தில் தமிழகத்துக்கு நீரை எளிதாக திறந்துவிடலாம்.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் இருந்து ஒரு வாளி நீரை கூட நம்மால் எடுக்க முடியாது. அணை நீரை பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும்.
மண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், துமகூரு ஆகிய மாவட்டங்களுக்கும் எளிதாக குடிநீர் வழங்கலாம்.
இந்த திட்டத்துக்கு மத்திய நீர் ஆணையம் விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.
மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒருமித்த குரலில் செயல்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.