சென்னை:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் பவானியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் எந்தெந்தக் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
அதேபோல், எங்கெல்லாம் கோயில்கள் கண்டுகொள்ளப்படாமல் இடிந்த நிலையில் இருக்கிறதோ அந்த கோயில்களின் பட்டியலை தயார் செய்து வருகிறோம்.
அந்தக் கோயில்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும்.
வழிபாடுகளே இல்லாமல் பல கோயில்கள் உள்ளன. அந்த கோயில்கள் அனைத்தையும் வழிபாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் உள்பட எந்த கட்டணத்தையும் நாங்கள் உயர்த்தவில்லை. அந்தக் கோயிலில் 20-க்கும் மேற்பட்ட சேவைகள் உள்ளன. அவை அனைத்தும் அதே கட்டணத்தில்தான் நீடிக்கிறது.
இந்நிலையில், நிர்வாகரீதியாக சில முறைகேடுகள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்தது தெரியவந்தது. மக்களிடம் கருத்துக் கேட்பு எனவே, சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகத்தால் பரிசீலனை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டிருக்கிறதே தவிர, கட்டணம் இன்னும் உயர்த்தப்படவில்லை.
கருத்துக்கேட்பில், பொதுமக்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால், நாங்கள் உயர்த்த மாட்டோம். பொதுமக்களின் கருத்துக்கு மாறாக இந்த அரசு எந்த முடிவையும் எடுக்காது.இவ்வாறு அவர் கூறினார்.