கோவை:
தவெக ஆட்சி அமைக்க பாஜகவின் ஆதரவை நாடவில்லை என கோவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முதல்வர் விஜய் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் முழுமையாக கேட்டுவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச வேண்டும்.
சட்டப்பேரவையை விட்டு வெளியே போய் கருத்து சொல்லாமல், உள்ளே இருந்து கருத்து சொன்னால் அதற்கான பதில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைத்திருக்கும்.
திமுக கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால்தான், மக்கள் நிராகரித்துள்ளனர்.
முதல்வர் விஜய் பிறந்த நாளன்று பள்ளி மாணவர்கள் கட்சிக்கொடி ஏந்தியதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சட்டப்பேரவைக்குள் 2 முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பாஜக தலைவர்களை நாடியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவை தவெக என்றைக்கும் கேட்கவில்லை.
நயினார் நாகேந்திரன் காமெடியாக பேசிக்கொண்டிருக்கிறார். நாங்கள் தவறு செய்யமாட்டோம், தவறு செய்யவிடமாட்டோம் என முதல்வர் சொல்லி உள்ளார்.
எனவே, கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை உள்பட அனைத்து விவகாரங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.