உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய மைதாவை தவிர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள்!!

ஊட்டச்சத்துமிக்க பொருட்களை உட்கொண்டால்தான் உடல்நலனை பாதுகாக்கலாம் என்பது தெரிந்திருந்தும் பலராலும் தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடியது என்று தெரிந்திருந்தும் அதன் சுவைக்கு அடிமையாகி பலரும் விரும்பி உட்கொள்கிறார்கள்.

அவர்களின் ருசிக்கு தீனிபோடும் விதமாக மென்மையான பரோட்டா முதல் பலதரப்பட்ட பேக்கரி பலகாரங்கள் வரை மைதாவில் தயாராகின்றன. இந்த மாவை ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன நல்ல மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

எடை குறையும்

சுத்திகரிக்கப்பட்ட இந்த மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்துவிடும். குறுகிய காலத்திற்குள் உடலுக்கு அதிக அளவு ஆற்றலையும் வழங்கிவிடும். அதனால் சில மணி நேரத்துக்குள் பசி உணர்வை தூண்டிவிடும். அதிக அளவு சாப்பிடுவதற்கும் வழிவகுத்துவிடும்.

மைதாவை விலக்கி வைப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பேணலாம். அதிகம் பசி எடுப்பதை குறைத்து உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். மைதாவுக்கு மாற்றாக முழு தானிய உணவுகளை தேர்ந்தெடுத்தால் அதிலிருக்கும் அதிக நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடப்பதற்கு வழிவகுக்கும்.

பசியை தூண்டாமல் வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும்.

செரிமான ஆரோக்கியம்

முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது மைதாவில் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ இல்லை. செரிமான அமைப்பை பராமரிக்க அவை அவசியம். மைதாவை தவிர்ப்பதன் மூலம் குடல் நலனை பேணலாம். அவை சிறப்பாக செயல்படவும் ஊக்குவிக்கலாம். உணவு உட்கொண்ட பிறகு வயிறு வீக்கம், அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

நாள்பட்ட நோய்களை குறைக்கலாம்

மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் டைப்- 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களுடன் தொடர்புடையவை. உணவுப்பட்டியலில் இருந்து மைதாவை நீக்குவதன் மூலம் நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கலாம். முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேணி நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கின்றன.

சருமம் பொலிவாகும்

மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கும் வித்திடும். மைதாவை தவிர்ப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதற்கு மாற்றாக முழுதானியங்களை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் தோல் மீளுருவாக்கம் பெறுவதற்கு உதவி புரியும். தோலின் நிறமும் மேம்படும்.

மனநிலை மேம்படும்

மன ஆரோக்கியத்திற்கும் உண்ணும் உணவிற்கும் கூட தொடர்பு இருக்கிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு மனநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிடும். அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதிக்கும். மூளைக்கு சீரான ஊட்டச்சத்துக்களை வழங்கும் முழு தானியங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம், மனநிலை மேம்படும். மனத்தெளிவும் கிடைக்கும்.

மந்த உணர்வு

சுத்திகரிக்கப்பட்ட மாவை உட்கொள்வது மந்தமாக உணர வைக்கும். ஆற்றலை மெதுவாகவும், சீராகவும் வெளியிடும் முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை பெறலாம்.

மேம்படுத்தப்பட்ட சுவை

சுத்திகரிக்கப்பட்ட மாவில் முழு தானியங்கள் தரும் சுவையை உணர முடியாது. முழு கோதுமை, ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்றவைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அவற்றின் மேம்பட்ட சுவையை முழுமையாக உணரலாம்.

நோய் எதிர்ப்பு செயல்பாடு

முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின்கள் பி, ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உணவில் அதிக முழு தானியங்களை சேர்ப்பதன் மூலமும், மைதாவை தவிர்ப்பதன் மூலமும், நோய்த்தொற்றுகளை தடுக்கலாம். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கிடைக்க செய்யலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *