சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிலியிருந்து விலகுவதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது, கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது தவறு எனவும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது:
நான் தேர்தல் நடப்பதற்கு முன்பே, வாக்காளர்கள் மற்றும் பத்திரிகையாளர் மத்தியில் “தேர்தல் முடிந்தவுடன் நான் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறேன்.
இதில் என்ன சந்தேகம் இருக்கிறது. பதவி விலகுவதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன்.
எல்லோருக்கும் ஒரு காலத்தில் காங்கிரஸ் மாநில தலைவராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். பதவி கிடைத்த பிறகு மனநிறைவோடு விலகிவிட வேண்டும்.
இதை நான் மனநிறைவோடு தேர்தலுக்கு முன்பே தெரிவித்துவிட்டேன். அதற்கு காரணமாக, சில சங்கடங்களும், மனக்கசப்பும் இருக்கின்றன.
அதற்கான வாய்ப்பு வரும்போது அது குறித்து மனம் திறந்து பேசுவேன். அதற்காக யாரையும் கொச்சைப்படுத்தி, சங்கடப்படுத்தி, பேசும் ஆள் நான் இல்லை.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தபோது, என்னை மாநில தலைவர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தேன்.
நான் பதவி விலக வேண்டும் என்று எந்த நெருக்கடியும் இல்லை. பதவில் இருப்பதை விட, பதவியில் இல்லாத போது தான் மகிழ்ச்சியாக இருப்போம்.
அடுத்த மாநில தலைவரை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.