சென்னை:
தமிழில் ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைதாரி.
இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், நடிகர் சித்தார்த்தைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தன் பெயரில் நடக்கும் மோசடி குறித்து இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் ஒருவர் மோசடி செய்து வருகிறார். தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, புகைப்படக் கலைஞர்களிடம் ‘போட்டோ ஷூட்’டுக்காக தொடர்பு கொண்டு ஏமாற்றி வருகிறார்.
அது நான் இல்லை, நான் இதுபோன்று யாரையும் அணுகமாட்டேன், தொழில் தொடர்பான எந்த விஷயத்துக்கும் தனிப்பட்ட எண்ணை பயன்படுத்துவதில்லை. அனைத்தும் எனது குழு மூலமாகவே நடக்கும். அந்த எண்ணுடன் எந்த தொடர்பும் கொள்ள வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.