தையூர்:
கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய வெடிக்காத ராக்கெட் குண்டை ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
கேளம்பாக்கம் அருகே தையூர் வி.ஐ.பி. நகர் வீட்டு மனைப்பிரிவில் உள்ள வற்றிய கிணற்றில் கடந்த 17-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், வெடிக்காத நிலையில் இருந்த ராக்கெட் லாஞ்சரை கண்டுபிடித்தனர்.
தகவலறிந்த கேளம்பாக்கம் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ராக்கெட் குண்டை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து, தடுப்புகள் அமைத்து 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து பரங்கிமலையில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில், நிர்வாக நடைமுறைகள் காரணமாக ஆட்சியர் மூலம் மீண்டும் உரிய தகவல் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, தமிழ்நாடு போலீஸ் வெடிகுண்டு செயலிழப்பு கமாண்டோ பிரிவினர் பாதுகாப்பு நடவடிக்கையாக குழி தோண்டி ராக்கெட் குண்டை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்நிலையில், பரங்கிமலை ராணுவ தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழு தையூருக்கு வந்து, கேளம்பாக்கம் போலீஸாரின் உதவியுடன் காலி விளைநிலத்துக்கு ராக்கெட் குண்டை எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்தது.
இதன் மூலம் கடந்த 12 நாட்களாக அச்சத்திலும் பதற்றத்திலும் இருந்த தையூர் கிராம மக்களின் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.