சென்னை:
தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், கைது செய்யப்பட்ட 8 பேர் போலீஸாரிடம் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
‘தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரலாம்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், ‘எங்களது தலைவர் 3 மாதத்தில் தேர்தல் வரும் என்று கூறியிருந்தால், அதற்கு அரசியல் ரீதியாக ஒரு பொருள் இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி யிருந்த நிலையில், தற்போது தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் இளையராஜா, தன்னை அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ், ரமேஷ், கார்த்தி உள்பட 8 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் கூறியதன் பேரில்தான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, இருவரிடமும் விசாரணை நடத்தவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க முதலில் சட்டப் பேரவையில் பேரவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரதிட்டமிடப்பட்டதாகவும், அதற்கு 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டதால், அவர்களை பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும், திட்டம் வெற்றியடைந்தால் தங்களுக்கும் பெரும் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், எந்தெந்த எம்எல்ஏக்களை அணுக வேண்டும் என்ற பட்டியல் வழங்கப்பட்டதாகவும், அதன்படி பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், எந்த எம்எல்ஏ.வும் பணத்துக்கு இணங்கவில்லை என்று வாக்குமூலத்தில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கின் அடுத்தடுத்த விசாரணையில் மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன்காரணமாக தமிழக அரசியலில் மேலும் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.