ராஞ்சி,
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகையில், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், 36 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது மாணவர்களிடம் அனில் சவுகான் கூறியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் ஒரு “புதிய வகையான போரை” முன்னறிவித்தது. மேலும் தாக்குதலின்போது பாகிஸ்தானை தோற்கடிப்பதை உறுதி செய்தது. பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும்.
நாட்டுக்கு சேவை செய்ய மட்டுமல்ல, வேறு யாரும் உலகத்தை பார்க்க முடியாத வழிகளில் காண்பதற்காக ராணுவத்தில் சேர வேண்டும்.
கடமை வாழ்க்கை, ஒழுக்கம், ஒப்பற்ற சாகசம் ஆகியவை நிறைந்த வாழ்க்கையை அனுபவியுங்கள். செல்போன் திரைகளை பார்ப்பதை கைவிட்டு, டிஜிட்டல் உலகத்துக்கு அப்பால், பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத அனுபவங்களை பெறுங்கள். நாட்டின் பல பகுதிகளுக்கு சாகச பயணம் மேற்கொள்ளுங்கள்.
ராணுவத்தில் நாங்கள் போரிட மட்டும் கற்றுத்தருவது இல்லை. நாட்டையும், அதன் மக்களையும், நிலப்பரப்பையும் கற்றுத்தருகிறோம். ஆகவே, இந்தியாவை உண்மையாக அறிந்துகொள்ள சீருடை அணியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.