கோவில்பட்டி:
விசிக தலைவர் திருமாவளவன் குறித்த கேள்விக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டல் அடிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கட்டிடம் கட்ட லஞ்சம், தொழிற்சாலை அமைக்க லஞ்சம், ஆயா வேலைக்கு லஞ்சம், கல்லூரிகளில் லஞ்சம் என தமிழகத்தில் புரையோடியிருந்த ஊழல்,கமிஷன், லஞ்சம் ஆகியவற்றை முதல்வர் விஜய் நீக்கியிருக் கிறார். கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் இல்லாத ஆட்சியை விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆட்சி 6 மாதம்கூட நீடிக்காது என சாபம் விட்டார்கள். இப்போது அந்த 6 மாதம் கூட பொறுக்க முடியாமல், ஆளுநரிடம் சென்று 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக புகார் கொடுக்கிறது.
ஆளுநர் ஆட்சி வந்தால், பாஜக தானே ஆட்சி செய்யும். பாஜக ஆட்சி செய்தாலும் பரவாயில்லை. தவெக ஆட்சியில் இருக்கக் கூடாது என திமுக நினைக்கிறது.
அந்த எண்ணம் ஒரு போதும் பலிக்காது. ஒருவேளை மீண்டும் தேர்தல் நடந்தால் 180-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெல்லும்.
விவசாயிகள் இப்போது பயிர்க்கடனுக்காக போராடுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவார்” என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள், தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும், தவிர்க்க மாட்டேன் என திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வைகோ, “ இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என கிண்டலாக பதிலளித்தார்.