சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்‌ சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத் துக்கு எதிரான குற்றம்!! முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி !!

சென்னை:
“சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்‌ சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத்துக்கு எதிரான குற்றம் என்று தமிழக முதல்வருக்கு தெரியாதா?” என சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்‌ சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா எங்கள் தமிழ்நாட்டின்‌ முதல்வர்? இது‌ பதவிப் பிரமாணத்துக்கு எதிரான குற்றம் என்று முதல்வருக்கு தெரியாதா?

41 பேர் கொலைக்கு காரணம் காவல் துறைதான் என்ற அபாண்டத்தை அள்ளி வீசுவது முதல்வருக்கு அழகா? இதனை இருமுறை டெல்லி சிபிஐ விசாரணைக்கு சென்றபோது மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்தீர்களா?

தமிழக முதல்வர் அரசு தலைமை செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வழிகாட்டுதலோடு ஆணவ வசனம் பேசி வருகிறாரா?

சட்டப்பேரவையில் கட்சி நிதி என்று சொன்னதும் திமுகவினர் ஓடிவிட்டார்கள் என்று வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் நக்கலடிக்கும் முதல்வர் விஜய், தேர்தலுக்கு முன் உங்கள் சட்டப் பேரவை வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை கட்சி நிதி பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் ரசிகர்களும், தவெக கட்சியினரும் புலம்புவது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா ?இது கட்சி நிதி இல்லையா?

இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா?’ என்று அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *