சென்னை:
காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 13.07.2026 முதல் 19.07.2026 வரை ஒரு வார கால சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், அவரின் புகழுக்கு மரியாதை செலுத்துவதோடு, “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமும் இணைந்து முன்னெடுக் கப்படுவதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 13.07.2026 முதல் 19.07.2026 வரை ஒரு வார கால சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பெருந்தலைவரின் புகழுக்கு மரியாதை செலுத்துவதோடு, “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமும் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
ஜூலை 13 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பெருந்தலைவர் காமராஜரின் உலக சாதனை மணல் சிற்பம் திறந்து வைக்கப்படுகிறது.
அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரவீன் சக்ரவர்த்தி, விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், எம்.கே.விஷ்ணு பிரசாத், சுதா ராமகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ், திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த மணல் சிற்பம் ஜூலை 19 வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
ஜூலை 15 (புதன்கிழமை) அன்று, மாநிலம் முழுவதும் காலை 10.00 மணிக்கு, மாவட்டம், வட்டம், நகரம் மற்றும் கிராமம் என அனைத்து நிலைகளிலும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு (சிலை இல்லாத இடங்களில் திருவுருவப் படத்திற்கு) மாலை அணிவித்து, மலர் மற்றும் மின் அலங்காரங்களுடன் மரியாதை செலுத்தப்படும்.
மாலை நேரத்தில் மாநிலம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பெருந்தலைவரின் சாதனைகள் மக்களிடம் எடுத்து ரைக்கப்படும். அதனுடன், “கைரேகைப் பதிவு” மூலம் லஞ்சம் கொடுக்கமாட்டோம், வாங்கமாட்டோம் என்ற மக்கள் உறுதிமொழி விழிப்புணர்வு இயக்கமும் நடைபெறும்.
மேலும், திருவானந்ததுறை நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துதல், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” இயக்கத் தொடக்க பொதுக்கூட்டம் (அமைச்சர்கள் எஸ். ராஜேஷ்குமார், பெ. விஸ்வநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்பு),
சென்னை பல்லவன் சாலை காமராஜர் சிலை, தி.நகர் நினைவு இல்லம் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஜூலை 17–19 (வெள்ளி–ஞாயிறு) வரை, மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊழலுக்கு எதிரான கையெழுத்து மற்றும் கைரேகை உறுதிமொழி இயக்கம் நடைபெறும்.
ஜூலை 19 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக மதுரையில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் வகையில் காமராஜரின் பிரம்மாண்ட மனித உருவப் படைப்பு (Human Formation Portrait) அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம், அமைச்சர் பெ. விஸ்வநாதன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக் கரசர், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று, மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், ஊடகங்களில் பரவலான வெளிப்பாட்டை உறுதி செய்திடவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.