மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா!!

மதுரை,
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கிரா மத்தினர் பலரும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மதுரைவீரன் சுவாமிக்கு சேவல்களை பலியிட்டு வழிபாடு நடத்தினர்.

அதன்படி 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்ந்து பலியிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பெரிய, பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டன. சேவல் கறியுடன், மொச்சைப்பயறு கலந்து உணவு சமைக்கப்பட்டது. இந்த உணவுகளை ஆண்கள் மட்டுமே சமைத்தனர்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் வாழை இலை போட்டு பக்தர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பெண்களுக்கு அன்னதானம் சாப்பிட அனுமதி இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். இதற்கிடையே நேற்று விழா நடக்கும்போது திடீரென அப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *