ஒவ்வொரு பிரார்த்தனையை சொல்லும்போது அந்தந்த பொருட்களை அம்பாளிடம் ஒப்படைக்க வேண்டும்!!

மனிதனுக்கு முக்கிய தேவை பணம். ஆனால் ஒரு சிலரிடமே பணம் தங்குகிறது.

பணத்தையும், பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள்.

இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார்.

மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார்.

அப்போது விஷ்ணு சில உபதேசங்களை சொன்னார்.

இந்த உபதேசத்தை நாமும் நமது வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து சொன்னால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

நம்மால் முடிந்த அளவிற்கு லட்சுமிக்கு நிவேதனங்கள் படைத்து இதை சொல்ல வேண்டும்.

அந்த உபதேச பிரார்த்தனை வருமாறு:

ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரைப்பூவில் வசிப்பவளே! ஆயிரம் நிலாக்களின் பிரகாசத்தைப் போன்ற முகத்தைப் பெற்றவளே! இனிமை தருபவர் உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிப்பவளே! தங்கத்தைபோல் மின்னுபவளே! ஒளி பொருந்திய ஆடையை அணிந்திருப்பவளே! பலவகை ஆபரணங்களால் ஒளி வீசும் தெய்வீக தன்மை கொண்ட தாயே! மலர்முகம் கொண்டவளே! மந்தகாச புன்னகையை உடையவளே! என்றும் குறையாத இளமையைக் கொண்டவளே! உன்னை வணங்குவோருக்கு சகல செல்வங்களையும் அள்ளித் தருபவளே! மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.

சகல உலகங்களிலும் உள்ளவர்களால் போற்றப்படும் தாயே! உலக உயிர்களுக்கு மகிழ்ச்சியை தருபவளே! ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! தாமரையில் வசிப்பவளே! உனக்கு தூய்மையான கங்கை நீரை அர்ப்பணம் செய்கிறேன்.

மிகவும் புனிதமானதும், பாவங்களை அழிக்கக் கூடியதுமான அக்னியைப் போன்றது இந்த கங்கை நீர், இந்த நீரை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு பூக்கள், சந்தனம் ஆகியவற்றுடன் கூடிய கங்கையின் புனித நீரை சங்கால் அபிஷேகம் செய்கிறேன் இதை நீ ஏற்றுக் கொள்வாயாக.

அன்பிற்குரிய ஹரிக்கு மனைவியானவளே! உனது தேகத்தின் அழகைக் கூட்ட நறுமண தைலத்தையும், நறுமண திரவியங்களையும் கொண்ட இந்த கங்கை நீரை அர்ப்பணிக்கிறேன். பரந்தாமனின் அன்பிற்குரிய செல்வமே! உனக்கு நறுமண திரவியங்கள் சேர்க்கப்பட்ட இந்த சாம்பிராணியைத் தருகிறேன். ஏற்றுக் கொள்.

பொதிகை மலையில் விளையும் சந்தனத்தை உனக்கு அர்ப்பணம் செய்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக. அழகிய வடிவம் கொண் டதும், ஒளி பரப்புவதும் சகல உயிர்களுக்கும் கண் போன்றதுமான இந்த தீபத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக.

அறுசுவை நிரம்பியதும் உடலுக்கு நல்லதுமான இந்த நைவேத்தியத்தையும் அளிக்கிறேன். இதையும் ஏற்றுக் கொள்.

இவ்வாறு கூறி வணங்க வேண்டும்.

ஒவ்வொரு பிரார்த்தனையை சொல்லும்போது அந்தந்த பொருட்களை அம்பாளிடம் ஒப்படைக்க வேண்டும்.

வசதி இல்லாதவர்கள் தீபம் ஏற்றி வழிபாட்டாலே போதுமானது.

அதே நேரம், மானசீகமாக இந்த பொருட்களை எல்லாம் அம்பாளுக்கு அர்ப்பணிப்பதாக கருதி இந்த உபதேசத்தை சொன்னால் நீங்கள் பணம் குவிக்கும் வகையில் லட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருவாள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *