அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிக்க வேண்டுமென்று சபாநாயகர் அப்பாவுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை 2வது நாள் கூட்டம் தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக உட்பட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டது. அதிமுக, பாமக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை புரிந்தனர்.
இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக உறுப்பினர் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்த நிலையில் சபாநாகர் அப்பாவுவின் எச்சரிக்கை மீறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு, இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விதித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று அத்தடையை ரத்து செய்து, அதிமுகவினரை அவைக்குள் வர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார்.