தேர்தல்கள் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம்!!

சென்னை:
தேர்தல்கள் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் ‘ஜனநாயகத்தை கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்’ என்ற கருப்பொருளில் மண்டல மாநாடு, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாநாட்டுக்கு தலைமை தாங்கி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள், 25 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், தேர்தல் விழிப்புணர்வு மன்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: இந்தியாவில் கடந்த 1996-ம் ஆண்டு முதல், தேர்தலில் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரம்பம் முதல் தற்போது வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான புகார் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் 41 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில்மட்டுமே வடிவமைக்கப்பட்டுள் ளன. வேறு எந்த தொடர்பும் இல்லை.

வெளிப்படைத்தன்மை யுடன் வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும் எனில் ஏஐ தொழில்நுட்பம், இணையதள வசதி மற்றும் கைபேசி வழி வாக்குப்பதிவு முறைகளை செயல்படுத்தமுடியாது.


பயோமெட்ரிக் வாக்களிக்கும் முறையை செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அதை செயல்படுத்த பரிசீலிக்கலாம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர்கள் பெருந்திரளாக வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

இந்தியாவில் தேர்தல்கள் உலகிலேயே மிகச்சிறந்த முறையில், மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகின்றன.

இதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பும் முக்கியம். அவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதேபோல் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தேர்தல் விழிப்புணர்வு மன்றங்களைப் பதிவு செய்து அமைப்பதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் முன்னணியில் திகழ்கின்றன.

நமது நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்கள், தேர்தல் நடைமுறைகளை தெளிவாக தெரிந்துகொள்ளவும், அதை உணர்ந்து அதன் மீது முழு நம்பிக்கை கொள்ளவும் இந்த தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் மிகவும் இன்றியமையாதவை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர்கள் ஆஷிஷ் கோயல் (ஊடகம்), சீமா கண்ணா (தகவல் தொழில்நுட்பம்), தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பள்ளிக்கல்வி செயலர் பி.சந்திரமோகன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *