நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா? – கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி!!

சென்னை:
‘நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?’ என உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தமிழக நிதியமைச்சராக உள்ள மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8 அன்று புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது அண்ணன் மரியகுலோத்தின் வீட்டுக்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மரியகுலோத் மற்றும் அண்ணி கெரோலின் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேலும் சில குற்றப்பிரிவுகளைச் சேர்த்து புதிதாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் மரிய வில்சனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில் தனக்கு எதிராக புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி மரிய வில்சன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். ஹாஜா முகைதீன் கிஸ்தி, ‘‘தமிழக சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘‘நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா? பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோதும்கூட ஒரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி வந்த மனுதாரர், நிதி அமைச்சராகி விட்டபிறகு நேரில் ஆஜராகமாட்டாரா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது புதுச்சேரி காவல்துறை தரப்பில், வேளாங் கண்ணியில் நடைபெறும் ஆலய கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் மரிய வில்சன் நடைபயணம் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, ‘‘அமைச்சர் வேளாங் கண்ணிக்கு சென்று திரும்பும்போது அப்படியே புதுச்சேரி நீதிமன்றத்திலும் ஆஜராகலாமே? யாருமே சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது.

அமைச்சர் என்றாலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது’’ என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், எந்த தேதியில் அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என கேட்டு தெரிவிக்கும்படி அவரது தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மரியவில்சன் தரப்பில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என்றும், புதிய குற்றப்பத்திரிகையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென்றும் கோரப்பட்டது.

மேலும் ஆக.31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவுள்ளதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக மரியவில்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். ஹாஜா முகைதீன் கிஸ்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அமைச்சர் மரிய வில்சனுக்கும், அவரது அண்ணன் மரியகுலோத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை எதுவும் கிடையாது.

குழந்தையை தத்து எடுத்ததில்தான் பிரச்சினை. அந்தக் குழந்தையை காரணம் காட்டி அறக்கட்டளை ஒன்றில் தங்களையும் உறுப்பினராக சேர்க்கக் கோரியும், கூடுதலாக பணம் கேட்டும் மரியகுலோத் தரப்பினர் மிரட்டி வருகின்றனர்.

குழந்தையை மீட்கச் சென்ற இடத்தில்தான் கடந்த 2022-ம் ஆண்டு அந்த தகராறு நடந்துள்ளது.

மரிய வில்சன் தற்போது நிதியமைச்சராக உள்ள நிலையில் அரசியல்ரீதியாக சிலரது தூண்டுதலின்பேரில் அவரது அண்ணன் மரியகுலோத் தரப்பினர் பழைய பிரச்சினையை தற்போது பெரிதாக்கி வருகின்றனர்.

அவர்கள் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால்தான் சமரச தீர்வு மையத்தில் தீர்வு எட்டப் படவில்லை’’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *