உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகிற பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. 60 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன.
இதைத்தவிர அணையின் உயிர்நாடியாக அப்பர் நீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட (பி.ஏ.பி.) தொகுப்பு அணைகளும் திகழ்கின்றன.
இந்த அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வருகிறது.
திருமூர்த்தி அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணையை ஆதாரமாக கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 18-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பஞ்சலிங்க அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அணையில் அடைக்கலமாகி நீர்வரத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பருவமழை தொடங்கிய நாளான கடந்த 18-ந்தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 38.15 அடியாக இருந்தது. ஆனால் இன்று காலை 50.81 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கடந்த 7 நாட்களில் 12.66 அடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் கடல்போல் அணை காட்சி அளிக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பாலாறு, காண்டூர் கால்வாய், தோணியாறு ஆகியவை மூலம் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
எனவே திருமூர்த்தி அணை, தனது முழு கொள்ளளவை எட்டும் சூழல் நிலவுகிறது. இதனையடுத்து கரையோர கிராம மக்களின் பாதுகாப்பு கருதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் அணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.