அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!!

காட்டாங்கொளத்தூர்:
காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அமைச்சரின் 3 பெண் குழந்தைகள் ராஜபாளையத்தில் இருந்து சென்னைக்கு காரில் பயணம் செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மகன் இறையன்பு (26). இவர் நள்ளிரவில் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் காட்டாங்கொளத்தூர் சந்திப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, ராஜபாளையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மாருதி எர்டிகா கார், காட்டாங்கொளத்தூர் சந்திப்பு அருகே அவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இறையன்புவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், இறையன்புவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய மாருதி எர்டிகா காரை சென்னை மாநகர காவல் ஆயுதப்படையில் பணியாற்றும் சின்ன அக்னி (28) ஓட்டி வந்துள்ளார்.

இவர் 2017-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தவர் என்றும், தற்போது புதுப்பேட்டை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக இறந்த இறையன்புவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Cr.No.511/T1/2026-ல் BNS 286 மற்றும் 106(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என்பது குறித்தும், விபத்து நேரத்தில் காரின் வேகம் எவ்வளவு இருந்தது, ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்துக்கு முன்பு கார் சென்ற பாதை, இருசக்கர வாகனம் சென்ற திசை உள்ளிட்ட விவரங்களையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

அமைச்சரின் குடும்பத்தினர் பயணம் செய்ததாக கூறப்படும் கார், ஆயுதப்படை காவலரால் ஓட்டப்பட்ட நிலையில் விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது காட்டாங்கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பான முழுமையான விசாரணைக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் குறித்த உறுதியான தகவல் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *