சென்னை:
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பேச வாய்ப்பு அளிக்காததைக் கண்டித்து திமுகவினர் நேற்று அமளி, தர்ணாவில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பும் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் எழுந்து நின்றனர்.
கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய் பேசி முடித்த உடன், திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை பேச அனுமதிக்கும்படி கேட்டனர்.
ஆனால், பேரவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் மறுத்துவிட்டார். மேலும், ‘முதல்வர் பேசவில்லை… பேசவில்லை… என்று கூறினீர்கள். அவர் இப்போது பேசும்போது அமைதியாகக் கேட்டிருக்க வேண்டும்.
அவர் பேசி முடித்த பின்னர் உங்களுக்கு பதில் அளிக்க அவகாசம் கொடுத்திருப்பேன்.
ஆனால் அவர் பேசுவது மக்களுக்கு போய் சேரக்கூடாது என்பதிலேயே நீங்கள் (திமுகவினர்) குறியாக இருந்து கூச்சல் குழப்பங்களில் தொடர்ந்து ஈடுபட்டீர்கள்.
எனவே, பேச வாய்ப்பு அளிக்க முடியாது. மிரட்டினாலும் உருட்டினாலும் நான் அனுமதி தர மாட்டேன். என்னை யாரும் நிர்பந்திக்க முடியாது” என்றார்.
அப்போது திமுக எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து பேரவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டதுடன், பேரவைத்தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். மேலும், பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பேரவைத் தலைவரிடம், அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் 2 முறை கோரிக்கை விடுத்தார்.
ஆனாலும், திமுகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர்.
இதையடுத்து, பேரவைத் தலைவர், “பேச அனுமதிக்க மாட்டேன், நீங்களாக வெளியே செல்ல வேண்டும் என்றால் செல்லலாம், இல்லாவிட்டால் அவைக் காவலர்களை வைத்து வெளியேற்றப்படுவீர்கள்” என்று கூறி அவை காவலர்களையும் அழைத்தார்.
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்கும்படி முதல்வர் விஜய் கூறினார்.
இதைத்தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினர் எழுந்து அவரவர் இருக்கைக்கு சென்றனர்.
சில திமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரைப் பார்த்து சில கருத்துகளை தெரிவித்தனர்.
இதைக் கவனித்த பேரவைத் தலைவர், எதிர்கட்சியினருக்கு பேச வாய்ப்பு தர முடியாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.