காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்கத் திட்டப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருக்களாச்சேரி கிராம மக்கள் சாலை மறியல்!!

காரைக்கால்:
காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்கத் திட்டப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருக்களாச்சேரி கிராம மக்கள் சாலை இன்று (அக்.7) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் அரசலாறு – முல்லையாறு இணையுமிடத்தில் 2012-ம் ஆண்டு ரூ.47.74 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. துறைமுகம் அருகே கடலோரத்தில் கருக்களாச்சேரி கிராமம் அமைந்துள்ளது.

இந்நிலையில், மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்து, 130.17 கோடியில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுக திட்டத்துக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து, தற்போதைய திட்டத்தின்படி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் கருக்களாச்சேரி கிராமம் வரை துறைமுகம் வருமென்றும், துறைமுகத்தில் இறக்கப்படும் கசார் என்கிற துர்நாற்றம் வீசக்கூடிய தீவனத்துக்கான மீன்கள் மற்றும் துறைமுகக் கழிவுகளால் மக்கள் வசிக்கும் பகுதியில் கொண்டு வரப்பட்டால் சுகாதாரமான முறையில் வசிக்க முடியாது எனவும் விரிவாக்க திட்டத்துற்கு கருக்களாச்சேரி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.

மேலும், விரிவாக்க திட்டத்தை கருக்களாச்சேரி கிராமம் பாதிக்காத வகையில் 150 மீட்டருக்கு அப்பால் வடக்குப் புறமாக அமைக்க வேண்டும் என கிராமத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு, தொடர்ந்து பல நிலைகளில் எதிர்ப்புத் தெரிவித்தும், போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர்.

மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே, கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி புதுடெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், துறைமுகத்தில் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விரிவாக்க நடவடிக்கைகளை கண்டித்து, நாகை – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், காரைக்கால் அம்மாள்சத்திரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியது: ”தற்போதைய திட்டத்தின்படி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் துறைமுகத்தில் இறக்கப்படும் கசார் என்கிற துர்நாற்றம் வீசக்கூடிய தீவனத்துக்கான மீன்கள் மற்றும் துறைமுகக் கழிவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நாங்கள் சுகாதாரமான முறையில் வசிக்க முடியாது. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.

நாங்கள் வளர்ச்சித் திட்டத்தை எதிர்க்கவில்லை, எதிராக செயல்படவும் இல்லை.

150 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மட்டும் வலியுறுத்துகிறோம்.

அவ்வாறு செய்யாவிட்டால் எந்த நிலைக்கும் சென்று போராடுவோம். எக்காரணம் கொண்டும் இதனை அனுமதிக்கமாட்டோம்” என்றனர்.

தொடர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக மத்திய அரசு, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை நிரவி போலீஸார் கைது செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *