புதுடெல்லி:
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளார்.
எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மம்தா இறங்கியுள்ளார்.
இண்டியா கூட்டணியிலிருந்து பிரிந்த திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை மீண்டும் சேர்ப்பது அவரது நோக்கமாக உள்ளது. ஒடிஸாவில் பிஜேடியையும் சேர்க்க மம்தா முயற்சிக்கிறார்.
தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து ஒன்றிணைய விரும்பும் பல கட்சிகள், தங்கள் சொந்த மாநிலங்களில் ஒருவருக்கொருவர் எதிர் எதிராகத் தேர்தலில் போட்டியிடும் சூழல் நிலவுகிறது.
இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறிய அர்விந்த் கேஜ்ரிவால் தொடக்கம் முதலே மம்தாவுடன் நட்பில் உள்ளார். இதனால், அவரை இழுப்பது பெரிய காரியமல்ல என மம்தா எண்ணுகிறார்.
பிஜேடி கடந்த காலத்தில் தனித்து செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், அதன் தலைவர் நவீன் பட்நாயக்குடன் மம்தாவுக்கு நல்ல நட்புறவு உள்ளது. இதனால் அவரையும் கூட்டணியில் சேர்க்க முடியும் என்று நம்புகிறார் மம்தா.
ஆனால், எதிர்க்கட்சியினரும் பாஜகவும் திமுக-வின் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். தமிழக முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் திமுகவுக்கு காங்கிரஸ் எதிரியானது.
எனினும், தேசிய விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியம் என மம்தா கருதுகிறார். இதைப்பற்றி விரிவாகப் பேச மம்தா விரைவில் தமி்ழகம் வந்து மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் தவெகவும் கலந்து கொண்டது. இச்சூழலில், தனது முக்கிய எதிரியாகக் கருதும் தவெக உள்ள அணியில் திமுக வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.