போலியாக உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்த வழக்கில் கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது!!

பெங்களூரு:
போலியாக உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்த வழக்கில் கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட கைதியின் மனைவியுடன் சோமசேகர் உறவில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள சிக்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் ஆறுமுகம் (42). இவர் கடந்த 2001-ம் ஆண்டு பணத்துக்காக ஆட்களை கடத்தி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இதையடுத்து, சங்கர் ஆறுமுகம் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், விரைவு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். இந்த இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆனால், சங்கர் ஆறுமுகம் தரப்பில், 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்திருப்பதாக போலியான தீர்ப்பு நகலை தயாரித்து, சிறையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது, சிறைத் துறை கண்காணிப்பாளராக இருந்த சோமசேகர், சங்கர் ஆறுமுகத்தை 2018-ம் ஆண்டு நவ.13-ம் தேதி சிறையில் இருந்து விடுவித்தார்.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூரு மத்திய சிறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர், கர்நாடக மாநில சிறைத்துறை டிஜிபிக்கு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், சிறை கண்காணிப்பாளர் சோமசேகர் போலியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை தயாரித்து ஆயுள் தண்டனை கைதி சங்கர் ஆறுமுகத்தை விடுதலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகார் கடந்த 4 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய சிறைத்துறை டிஜிபியாக பொறுப்பேற்ற அலோக் குமார், இதுகுறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அந்த விசாரணையில், சிறையின் தலைமை காவலராக இருந்த ஸ்ரீகாந்த் போலியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை தயாரிக்க உதவியது தெரிய வந்த‌து.

சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சோமசேகருக்கு தெரிந்தே அவர், இந்த மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த போலியான தீர்ப்பு நகலின் அடிப்படையில் சங்கர் ஆறுமுகத்தை அவர் விடுதலை செய்தது உறுதியானது.

இதுகுறித்து, சங்கர் ஆறுமுகத்தின் மனைவியிடம் விசாரித்த போது, தனது கணவரை விடுதலை செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுத்த‌தாக வாக்குமூலம் அளித்தார்.

மேலும் சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சோமசேகர் தன்னுடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டிருந்தார் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, போலீஸார் சிறைத்துறை டிஐஜியாக இருந்த சோமசேகரை கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.

அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், சங்கர் ஆறுமுகம், தலைமை காவலர் ஸ்ரீகாந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீஸார் தீவிர‌ விசாரணை மேற்கொண்டுள்ளன‌ர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *