12 அம்மன் கோவில்களில் தசரா திருவிழா!!

கர்நாடக மாநிலம் மைசூர், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாக்களுக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டை பகுதியில் இருக்கும் 12 அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.


அதன்படி, நேற்று 12 அம்மன் கோவில்களில் பிரதான கோவிலான பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, நேற்று மாலையில் பாளையில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களுக்கு தாமிரபரணி நதியில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர், நள்ளிரவில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் பிரசித்தி பெற்ற பாளை நகரில் உள்ள 11 அம்மன் கோவில் உற்சவமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து பாளை ஆயிரத்தம்மன், முப்புடாதி அம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், உலக அம்மன், முத்தாரம்மன் உள்ளிட்ட நகரின் பிரசித்தி பெற்ற 11 அம்மன் சப்பரங்களும் மேளதாளம் முழங்க பாளையங்கோட்டை ராமசுவாமி கோவில் திடலுக்கு வந்தடைந்தன.

தொடர்ந்து அங்கு 11 சப்பரங்களும் ஒருசேர அணிவகுத்து நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், பாளையங்கோட்டை நான்கு ரத வீதிகள் வழியாக அம்மன் கோவில்களின் சப்பரங்கள் ஊர்வலமாக சென்று ஆயிரத்தம்மன் கோவில் முன்பு உள்ள பந்தலை அடைந்தன. அங்கு தசரா திருவிழா கொடி பந்தலில் கொடியேற்றப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *