பெங்களூரு அசத்தல் வெற்றி..!

இன்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

அதில் டு பிளெசிஸ் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரஜத் படிதார், வில் ஜாக்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். அரைசதமடித்த ரஜத் படிதார் 32 பந்துகளில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து வந்த கேமரூன் கிரீன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 187 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் கலீல் அகமது, ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே பெங்களுரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவிட் வார்னர் 1 ரன்னிலும், அவரை தொடர்ந்து அபிஷேக் போரல் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜேக் பிரேசர் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஷாய் ஹோப் 29 ரன்களிலும், குமார் குஷ்காரா 2 ரன்களிலும், ஸ்டப்ஸ் 3 ரன்களிலும், ரசிக் சலாம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அக்சர் படேல் தனி ஆளாக போராடினார். அரை சதம் அடித்த அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முடிவில் டெல்லி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே ஆப் வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 57 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *