இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகள் முழுமையாக அமல் செய்யப்படும் – கெஜ்ரிவால் வாக்குறுதி !!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

பின்னர், மே 10ஆம் தேதி பிணையில் வெளிவந்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டெல்லிக்கு மாநிலத் தகுதி, இலவச மின்சாரம், தரமான இலவச மருத்துவம் மற்றும் தரமான இலவசக் கல்வி, ஜிஎஸ்டி வரிவிதிப்பை எளிமையாக்குதல், ஊழல் ஒழிப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

இலவச மின்சாரம்: இந்தியா முழுவதும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஆம் ஆத்மியின் ஆட்சியில் டெல்லி, பஞ்சாப் மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம். அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

பாஜக ஆட்சியில் தரம் தாழ்ந்த நிலையில் செயல்பட்டு வந்த அரசாங்க மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை மேம்படுத்தி தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம். அத்துடன் நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் பாகுபாடின்றி இலவச மருத்துவச் சிகிச்சை கிடைக்க வழிவகை காண்போம்.

சீனாவிடம் இழந்த நிலம் மீட்கப்படும்: சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்படும். சீனா நிலங்களை ஆக்கிரமிக்கவே இல்லை என்று பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

‘அக்னி பாதை’ என்னும் திட்டம் இளைஞர்களின் நலன்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே முப்படைகளில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் இந்த அக்னி பாதை திட்டம் அடியோடு நீக்கப்படும்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகள் முழுமையாக அமல் செய்யப்படும். அந்தக் கமிட்டியின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்று கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *