”கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டது” – அண்ணாமலை!!

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பி.எம்.கிசான் என்ற விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் 43 லட்சம் சிறு குறு விவசாயிகள் பதிவு செய்து இருந்தனர்.

அதில் தற்போது பயனடைய கூடிய விவசாயிகளின் எண்ணிக்கை 21 லட்சமாக குறைந்துள்ளது.

இதில் மத்திய அரசுக்கு பழிச்சொல் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா? அல்லது போலி விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளனாரா?, போலி விவசாயிகளை பதிவு செய்து அதன் பேரில் பயனடைந்த அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது? என்பதற்கு முறையான பதிலை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி பாஜக சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், சிறப்பு முகாம்களை அமைத்து, பி.எம்.கிஷான் திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டிய உண்மையான விவசாயிகளின் பெயர் பட்டியலை தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

கோஷ்டி மோதலால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்படவில்லை. அது ஒரு அரசியல் படுகொலை. அதற்கு காரணமானவர்கள் என அருள், கலை ஸ்ரீனிவாசன், சதீஷ் ஆகிய மூன்று குற்றவாளிகளது பெயர்கள் வெளியாகியுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள், எப்படி தப்பி ஓடுவார்கள்? அவர்களது கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் எங்கிருந்து வந்தது? இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று திருமாவளவன் கூறியுள்ளார். அக்கருத்தை அவர் இதுவரை திரும்பப் பெறவில்லை.

நீதிமன்றத்தில் முன்பாக நிறுத்தப்பட்டால் மட்டுமே, இந்த வழக்கின் உண்மை முகம் தெரியவரும். மாறாக என்கவுண்டர் மூலமாக இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர நினைப்பது ஏற்புடையது அல்ல. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். உள்துறை அமைச்சகம், இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தை பேசி தீர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடகாவிற்கு நேரில் சென்று தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டின் உள்ள அரசியல் கட்சியினர் கர்நாடகாவிற்கு சென்று அங்குள்ள முதல்வர் சீதாராமையாவிடம் சமரசம் பேசி, தமிழக விவசாயிகளின் நலனுக்காக தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்.

அதற்காக கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்திலும், அதற்காக நடத்தப்படும் போராட்டங்களிலும் பங்கேற்க தமிழக பாஜக தயாராக உள்ளது. காவேரி நீர் பங்கிட்டு விவகாரத்தை இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை மூலம் பேசி தீர்க்க வேண்டும்.

அதற்காக கர்நாடக மாநிலத்திற்கு சென்று முறையிடாமல், டெல்லிக்கு சென்று முறையிடலாம் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. இதில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியா கூட்டணி அரசியல் கட்சியினர் விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக மாநில அரசை 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைத்தால், அது ஜனநாயகத்திற்கு எதிரானது என கூறி தமிழக விவசாயிகளின் நலனை மறந்து திமுக போராட்டம் நடத்தும்.

இந்திராகாந்தியை போல நதிநீர் பிரச்சனைக்காக, மத்திய பாஜக அரசும் ஒருபோதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை பாஜக அரசு கலைக்காது. 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி எந்தஒரு மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக பாஜக அரசு இதுவரை கலைத்தது கிடையாது.

அதே சமயம் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *